5.20.2011

குயிலோசையும் துப்பாக்கிக் குழலோசையும்…


“கொள்ளைக்காரன் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கிறான்
மக்களின் பணத்திற்கு பொறுப்பாய் இருக்கிற அதிகாரிகளோ
பேனாவை வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள்
………………………………………….
………………………………………….
துப்பாக்கி எண்பதாயிரம் நைராக்களைக் (நைஜீரியன் பணம்) கொள்ளையடிக்கிறது
பேனா இரண்டு பில்லியன் நைராக்களைக் கொள்ளையடிக்கிறது”

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வரிகளை எழுதியவர் நைஜீரியப் பாடகர் பீலா அனிக்குலபோ குட்டி. இரண்டு பில்லியன் நைராக்கள் என்பது நிச்சயமாக ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விடக் குறைவாகத்தானிருக்கும். அவரது ‘பிட்ஜின்’ஆங்கிலத்திலிருந்தும் சாக்ஸபோன், ட்ரம்பெற், கிற்றார் இன்னும் இன்னும் அதிரும் வாத்தியப் பேரோசைகளிலிருந்தும் இடுப்பொடித்துத் துடிதுடிக்கும் நடனத்திலிருந்தும் பாடல் வரிகளை உருவியெடுப்பது சிரமம். அவர் உள்ளாடையுடன் செவ்வியை எதிர்கொள்வதும், இருபத்தேழு பெண்களை ஒரே சமயத்தில் மணந்து மறுநாளே அவர்களை விவாகரத்துச் செய்துவிட்டதும் பலவித கற்பிதங்களால் பிசைந்து உருவாக்கப்பட்டிருக்கும் நமது கலாச்சார மனதிற்கு ஏற்புடையது இல்லை. ஆனாலும், ஒப்பனைகளற்ற, தார்மீகக் கோபம் செறிந்த வரிகள் அவரை நேசிக்கப் பணித்துவிடுகின்றன. குறிப்பாக- சாராயம், பிரியாணி, பணப்பட்டுவாடா, அரிவாள் நிர்ப்பந்தங்கள் இன்னபிற ஒப்பீட்டளவில் குறைந்த, ஆறுதலளிக்கக்கூடியதொரு தேர்தலை, தமிழக மக்கள் எதிர்கொண்டு ஆசுவாசித்திருக்கும் இந்நேரத்தில், அனிக்குலபோ குட்டியின் வரிகள், மேலதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

‘இராணுவ ஆட்சி நடத்திய நைஜீரிய அரசாங்கத்தின் கண்ணுக்குள் குரலை வைத்து ஆட்டியவர்’ என்று இவரைப் பற்றிச் சுருக்கமாக ஒரே வரியில் சொல்லிவிடலாம். இவரது பாடல்களோ மிக நீளநீளமான வாத்தியங்களோடும் மிக நீளநீளமான ஆரம்ப இசையோடும் கூடியவை. சில நிமிடங்களாவது ஊதி விட்டுத்தான் பாடலுக்குள் பிரவேசிக்கிறார். தனது பாடல்கள் வழியாக மக்களைக் கிளர்ந்தெழச் செய்த இவர்மீது வழக்கமாக எல்லா அரசாங்கங்களும் போடக்கூடிய வழக்குகளை - கள்ளநோட்டு கடத்தினார், கொலை செய்தார், போதைப் பொருள் வைத்திருந்தார்- நைஜீரிய அரசாங்கமும் போட்டது. நைஜீரிய அரசாணை எல்லைக்குள் அடங்காது என அறிவிக்கப்பட்ட இவரது ‘கம்யூன்’க்குள் (1977 இல்) புகுந்த ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அங்கிருந்த வாத்தியங்கள், ஒலிப்பதிவுக் கூடம், இசைத்தட்டுக்கள் யாவற்றையும் எரியூட்டினார்கள். அனிக்குலபோவின் வயதான தாயை யன்னல் வழியாக வெளியே வீசி எறிந்தார்கள். அவர் அதன் பிறகும் பாடினார்.

“நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராட அஞ்சுகிறோம்
நாங்கள் விடுதலைக்காகப் போராட அஞ்சுகிறோம்
நாங்கள் நீதிக்காகப் போராட அஞ்சுகிறோம்
எங்கள் மகிழ்ச்சிக்காகப் போராட அஞ்சுகிறோம்
நாங்கள் அஞ்சுவதற்கு ஏராளமான காரணங்களை வைத்திருக்கிறோம்”

அன்றாட வாழ்வில் அச்சம் என்பது நமது நிழலைப்போல தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பாதுகாப்பான இந்த நாள் நமது காலடியிலிருந்து ஒரு துணியைப் போல உருவப்படக் கூடும் என்று அஞ்சுகிறோம். அதிகாரங்களுக்கெதிராகக் குரலை உயர்த்தினால் ஒரு துப்பாக்கிக் குண்டு நமது குழந்தைகளை அநாதைகளாக்கிவிடும் என்று அஞ்சுகிறோம். மீண்டும் மீண்டும் அரசியல்வாதிகளிடம் ஏமாந்துபோவோம் என்று அஞ்சுகிறோம். நாம் மரணத்தை அஞ்சுகிறோம். வாழுங் காலத்திலேயே இறந்துபோய்விட்டவர்கள் நாங்கள்.

நாம் பொதுப்புத்தியால் வார்க்கப்பட்டவர்கள். வெள்ளைத்தோலர்கள் நீதிமான்கள் எனவும் கறுப்பினத்தவர்கள் திருடர்கள் எனவும் ஒரு சித்திரம் நம்மில் பலருக்குள் படிந்துபோயிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள ‘கனவான்’களின் கண்களில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவே எழுதப்பட்டிருக்கிறார்கள். ரொறன்ரோவில் சில வீட்டுச் சொந்தக்காரர்கள் பாகிஸ்தானியர்களுக்கு வீடு கொடுப்பதில்லை. அவர்கள் ‘அழுக்கானவர்கள்’என்று காரணம் சொல்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு பயங்கரவாதிகள், ஆட்கடத்தல்காரர்கள் (ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு), போதைப் பொருள் கடத்துபவர்கள் எனப் பல அடையாளங்கள் உண்டு. அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டவர்களே, ‘ஐயோ!ஜமேக்காக்காரனா…? கள்ளன்!’என்று ஒரே வார்த்தையில் ஓங்கி அடித்துவிடுவார்கள்.‘மஞ்சள் துண்டுக்காகக் கழுத்தறுப்பவன்’என்று ஊரில் சொல்வார்களே அப்படியொரு அழுத்தம் அந்தக் ‘கள்ளன்’இல் இருக்கும். உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் கடவுளாகவே கருதி வழிபடும் பாப் மார்லி ஜமேக்காவிலுள்ள நைன் மைல் என்ற கிராமத்தில் பிறந்தவர் என்பது பொதுப்புத்தியாளர்களை ஆச்சரியப்படுத்தலாம். கறுப்பின மக்கள் மேலாதிக்க நிறவெறியர்களால் எவ்விதமெல்லாம் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றிய ‘பஃபலோ சோல்ஜர்ஸ்’என்ற, அரசியல் ஆழம் மிகுந்த பாப் மார்லியின் பாடல் மெட்டில், தமிழில், ‘அகிலா… அகிலா’ என்ற ‘பொருள்செறிந்த’ பாடல் வெளியாகியிருக்கிறது.

கறுப்பின மக்களின் உழைப்பு எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படுகிறது, அவர்கள் எப்படியெல்லாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக இழிவாக நடத்தப்படுகிறார்கள், அரசியல்வாதிகளது நோக்கங்களால் இளைஞர்கள் எவ்விதம் வன்முறையை நோக்கிச் செலுத்தப்பட்டு பலியாகிறார்கள் ஆகியவை குறித்த அவரது பாடல்கள் மூலம் உலகெங்கிலும் வாழும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பாப் மார்லி.

பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் சரித்திரங்கள் ஒன்றேபோல இருக்கின்றனஅரசியல்வாதிகளும் அதற்கியைபுறவே. ஜமேக்காவின் வேலையில்லாத் திண்டாட்டமும் அதன் பின்விளைவான வறுமையும் இளைஞர்களை விரக்தியடையச் செய்தன. குற்றச்செயல்களுக்குத் தூண்டின. ஜமேக்காவில் மக்கள் தேசியக் கட்சி, மக்கள் தொழிலாளர் கட்சி (தி.மு.க – அ.தி.மு.க.போல) என்ற இரண்டு கட்சிகளுமே மாற்றி மாற்றி செல்வாக்குச் செலுத்திவந்தன. இரண்டுக்குமிடையில் பலத்த அதிகாரப் போட்டி நிலவியது. வழக்கம்போல இளைஞர்களினிடையிலிருந்து அடியாட்கள் பொறுக்கி எடுக்கப்பட்டார்கள். எங்கும் வன்முறை தலைவிரித்தாடியது. பாப் மார்லி அதைப் பார்த்து வேதனையடைந்தார். வன்முறையை வாழ்முறையாகக் கொண்டிருந்த சேரி இளைஞர்களிடையே வாழ்வின் உன்னதத்தை உணர்த்த வேண்டியும், தான் பிறந்த மண்ணாகிய ஜமேக்காவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ‘ஸ்மைல் ஜமேக்கா’என்ற நிகழ்ச்சியை ஒருங்கமைத்துப் பாடுவதற்கு பாப் மார்லி தீர்மானித்தார். அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது 1976ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி பாப் மார்லி தங்கியிருந்த இடத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். பாப் மார்லியின் நெஞ்சிலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் பாப் மார்லி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஆட்சியிலிருந்த மிக்கேல் மான்லிக்கு மார்லி ஆதரவாக இருந்தார் என்ற தவறான எண்ணத்தின் விளைவாகவே தாக்குதல் நடத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு ஜமேக்காவிலிருந்து வெளியேறிய பாப் மார்லி இரண்டாண்டுகளின் பின்பே பிறந்த மண்ணுக்குத் திரும்பினார்.

‘றெகே’ எனப்படும் இசை வகைமை மூலம் தனது மக்களுக்காகப் பாடிய பாப் மார்லி, தனது முப்பத்தாறாவது வயதில் இசையுலகிலிருந்து மறைந்தார். பெருவிரலில் தொடங்கிய புற்றுநோய் அவரது உடல் முழுவதும் ஆக்கிரமித்து மரணத்தில் விழுத்தியது.

“பணத்தால் வாழ்க்கையை வாங்க முடியாது”மரணப் படுக்கையில் இருந்தபோது தனது மகன் ஸிக்கியிடம் பாப் மார்லி கூறினார். பணத்தால் ஆட்சி அதிகாரத்தை, மக்களது விசுவாசத்தை வாங்க முடியும் என்று நம்புகிறவர்களுக்கு மேற்கண்ட வாசகங்கள் எந்தவொரு சேதாரத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.

“அரசியல்வாதிகளின் சலுகைகளை ஒருபோதும் அனுமதியாதீர்கள்
அதன் வழி உங்களை என்றென்றைக்குமாக
அடிமைப்படுத்திவிடுவார்கள்”-பாப் மார்லி

சலுகைகளைக் கொடுத்து மக்களை வாங்குவது அன்றைக்கும் என்றைக்கும் அரசியல்வாதிகளின் தலையாய பணிகளுள் ஒன்றாக இருந்துவந்திருக்கிறது. அவர்கள் தொலைக்காட்சிகளைத் தந்து உங்கள் மூளையை வாங்குவார்கள். அரிசியைத் தந்து உங்கள் தன்மானத்தை வாங்குவார்கள். பணத்தையும் போதையையும் தந்து உங்கள் ஆட்காட்டி விரல்களை வாங்குவார்கள். அரவை இயந்திரங்களைத் தந்து உங்கள் சமையலறைக்குள் நுழைவார்கள். மடிக்கணனிகள் வழியாக உங்கள் அந்தரங்கத்துள் மூக்கை நுழைப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வீடுகளைத் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். நல்லது! மிக நல்லது!!

பாப் மார்லியின் வார்த்தைகளில்…

“அவர்கள் சொல்கிறார்கள்
நாம் அறிந்ததெல்லாம் அவர்கள்
நமக்குச் சொல்லித் தந்தவைதானென்று
நாம் ஏமாளிகளாக இருக்கிறோம்
அவர்கள் ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு தந்திரத்தைப் பயன்படுத்தி
நம்மை ஏமாற்றுகிறார்கள்
நாம் பசியோடிருக்கிறோம்
ஏதாவது கிடைத்து சாப்பிடப் போனால்
எதிரியாகிவிடுகிறான் நம் சகோதரன்”

(நன்றி - மொழியாக்கம்: ரவிக்குமார்)

மேற்கண்ட மொழியாக்கம் ஒரு கண்ணாடியைப் போலிருக்கிறது. அதில் நாம் அனைவரும் - மொழியாக்கம் செய்தவர் உட்பட-முகம் பார்த்துக்கொள்ளலாம்.

நாங்கள் போராட மறுக்கிறோம். சமரசங்களுக்கு எங்களை விட்டுக் கொடுத்துவிடுகிறோம். சிலரோவெனில் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்துவிடுகிறார்கள். தனது இறுதிக்காலம் வரை தன்னை விட்டுக்கொடுக்காத, விற்றுக்கொள்ளாத ஒரு மனிதர் வாழ்ந்தார்.

அவர் பெயர் பால் ராப்சன்.

1898ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜேர்ஸியில் பிறந்தவர். பாடகர், நடிகர், விளையாட்டு வீரர், சமூகப் போராளி, வழக்கறிஞர் எனப் பன்முக ஆளுமை உடையவர். ‘ஆனாலும், அவர் ஒரு கறுப்பர்’என்று மேலாதிக்க வெள்ளையர்கள் புறமொதுக்கினார்கள். அந்நாட்களில் கறுப்பின மக்கள் விலங்குகளுக்கு இணையானவர்களாகவே பார்க்கப்பட்டார்கள். உணவகங்களிலும் விடுதிகளிலும் உள்நுழையும் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டவியல் தொடர்பான அலுவலகமொன்றில் சட்ட ஆலோசகராக அவர் வேலை பார்த்தபோது அவர் சொல்லும் குறிப்புகளை சுருக்கெழுத்தில் எடுத்துக்கொள்ள அங்கிருந்த வெள்ளையினத்தைச் சேர்ந்த காரியதரிசி மறுத்துவிட்டாள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ‘பிவர்லி வில்ஷயர்’என்ற நட்சத்திர விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்ட முதல் கறுப்பினத்தவர் இவர்தான். கட்டணமாக ஒரு நாளைக்கு நூறு டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தது(1939 இல்.) அவர் ஒவ்வொரு நாட்களும் பின்மதிய நேரத்தில் குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது விடுதியின் வரவேற்பறையில் மற்றவர்களின் பார்வையில் படும்படியாக அமர்ந்திருப்பாராம். ‘ஏன் இவ்விதம் அமர்ந்திருக்கிறீர்கள்?”எனக் கேட்டபோது, ‘இந்த விடுதியில் கறுப்பினத்தவர்கள் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஏனைய கறுப்பின பாடகர்களுக்கும் நடிகர்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாகவே நான் இவ்விதம் அமர்ந்திருக்கிறேன்.’என்று பதிலளித்தார் பால் ராப்சன்.

வாழும்காலம்வரை அல்லது தொடர் அழுத்தங்களால் நோய்வாய்ப்படும்வரை மனிதவுரிமைகளுக்காக அதிகாரங்களோடு போராடியவர்.

“நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா?”அவரது நடவடிக்கைகளால் எரிச்சலூட்டப்பட்ட சி.ஐ.ஏ.கேட்கிறது.

“இல்லை. நான் எனது மக்களுக்காகப் பேசுகிறேன். அவ்வளவுதான்.”

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் அயராது போராடினார். ஏகாதிபத்தியத்திற்கெதிராக எழுதவும் மேடைகளில் உரையாற்றவும் பாடவும் செய்தார். தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகக் குரல்கொடுத்ததோடல்லாமல், தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட போராட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டார். அமெரிக்காவில் மட்டுமென்றில்லாது உலகெங்கும் பயணஞ்செய்து ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக, நசுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக, சுரங்கத் தொழிலாளர்களுக்காக, அரசின் கொடுங்கரங்களால் எந்தவித நீதி விசாரணையுமின்றிக் கொல்லப்பட்டு வந்த மனிதர்களுக்காக பால் ராப்சன் குரல்கொடுத்தார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டார்.

சி.ஐ.ஏ., எஃ.பி.ஐ. மற்றும் எம்.ஐ.5 என அழைக்கப்படும் பிரிட்டனின் உளவுத் துறை என அரசின் கண்காணிப்பு இயந்திரங்கள் அனைத்தாலும் பின்தொடரப்பட்டார். பின்தொடரப்பட்டார் என்பதைக் காட்டிலும் உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பதே பொருந்தும். அரசுக்கெதிரான கருத்துக்களைப் பரப்புகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கறுப்புப் பட்டியலில் அவரது பெயர் இணைக்கப்பட்டது. மேடை நிகழ்வுகள், வானொலி, தொலைக்காட்சி, திரை அனைத்திலிருந்தும் விலக்கிவைக்கப்பட்டார். அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன. விளையாட்டுத் துறையில் அவர் நிகழ்த்திய சாதனை விபரங்கள் காணாமலடிக்கப்பட்டன. சோவியத் யூனியன் அவரது ஆதர்ச நிலமாக இருந்துவந்தது. அவரை விசாரணை செய்தவர்கள் அவரிடம் கேட்டார்கள்.

“நீங்கள் ஏன் ரஷ்யாவிற்குச் சென்று அங்கு வாழக்கூடாது?”

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நிழல் யுத்தம் நடந்துவந்த காலத்தில் இந்தக் கேள்வி பயங்கரமான உள்ளர்த்தங்கள் பொருந்தியது.

“என்னுடைய தந்தை இந்த மண்ணில் ஒரு அடிமையாக இருந்தார். எனது மக்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் மாண்டுபோனார்கள். பேரினவாதிகளாகிய உங்களுக்கு இந்த மண்ணில் எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை எனக்கும் இருக்கிறது. நான் இங்குதான் இருப்பேன். புரிகிறதா?”

அவர் மேலும் சொல்கிறார்:

“எந்த மக்களிலிருந்து நான் வந்தேனோ அந்த மக்களுக்காக நான் பேசுகிறேன். என்னுடைய நோக்கம், வாழ்வு, நம்பிக்கை யாவும் அவர்களை முன்னிறுத்தியதே.”

1950ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் பால் ராப்சனின் கடவுச்சீட்டை திரும்பப்பெற்றது. அப்படிச் செய்ததன் வழியாக அமெரிக்காவின் ‘புகழுக்கு’க் களங்கம் நேராமல் காப்பாற்றிவிட்டதாக நினைத்தது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து உலகெங்கும் பால் ராப்சன் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினாலேயே அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது. ஊடகங்களிலிருந்து அவர் காணாமலடிக்கப்பட்டார். ஆனால், பால் ராப்சனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் நினைத்ததுபோல கட்டுப்படுத்துவது எளிதானதாயில்லை. பால் ராப்சன் பாடுகிறார்.

“நீங்கள் எனது பெயரை அழித்துவிடலாம்
என்னை நிந்தனை செய்யலாம்
என்னை வதைச் சட்டகத்தில் இழுத்துக் கட்டலாம்
ஆனால்…
நான் எந்தவொரு மனிதனுக்கும் அடிபணிய மாட்டேன்
அவன் கறுப்பனோ வெள்ளையனோ.
எனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யலாம்
பயணிக்க அனுமதி மறுக்கலாம்
ஆனால்…
முழந்தாளிட்டுப் பணிவேன் என்று நினைக்காதீர்
என்னை இறைஞ்சவைக்க உம்மால்
ஒருபோதும் இயலாது.
ஜனநாயகம் என்பது வாக்குரிமை மட்டுமன்று
அதனிலும் மேலானது
இங்குள்ள எந்தவொரு மனிதனுக்கும் நிகரானவன் நான்
எனது மக்களை விடுவியுங்கள்
அவர்களைப் போக விடுங்கள்
என்னுடம்பைச் சுற்றியுள்ள இந்தச் சங்கிலிகள்
ஒருபோதும் என்னைக் கட்டுப்படுத்த மாட்டா
என்னுடைய சொந்த நாட்டில்
அடிமையாக இருப்பதற்கு மறுக்கிறேன்.”
………………………………………………….
………………………………………………….


“சொந்த நாட்டில் அடிமையாக இருப்பதற்கு நான் மறுக்கிறேன்”என்ற பால் ராப்சனின் வாசகத்தைத்தான் ஒவ்வொரு பாலஸ்தீனியரும் ஒவ்வொரு ஈழத்தவரும் சொல்கிறார்கள். பால் ராப்சன் என்ற மகத்தான மனிதனின் கூற்றை சமகாலத்தில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு பெண். அவள் ஈழத்தைச் சேர்ந்தவள். மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம் என்ற அந்தப் பெண் தொடர்ந்து வியப்பிலாழ்த்தக் கூடியவளாக இருந்து வருகிறாள். 2004ஆம் ஆண்டு ‘சலாங்’, ‘சன்சவர்ஸ்’என்ற தனிப்பாடல்கள் மூலம் அறிமுகமாகிய மாயா பிறந்தது இங்கிலாந்தில். மாயாவின் தந்தை அருட்பிரகாசம் ‘ஈரோஸ்’ என்று அழைக்கப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். ‘லங்கா ராணி’எனும் நாவலையும் எழுதியிருக்கிறார். மாயா ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பதினொரு வயதுவரை வாழ்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலங்கை இராணுவத்தின் அராஜகங்களைக் கண்ணால் கண்டவர்.
மாயாவை நேர்காணல் செய்யும் பெரும்பாலான ஊடகங்கள், சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு கேள்வியை அவரை நோக்கி வீசுகின்றன.

“உலகின் பல பாகங்களிலும் பயங்கரவாத இயக்கம் என்று தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீங்கள் ஆதரிப்பதாகச் சொல்லப்படுகிறதே…?”

“நீங்கள் ஒரு பயங்கரவாதியா?”என்ற கேள்வியைத்தான் அவர்கள் அப்படி நாகரிகமாகக் கேட்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கேள்வியை விதம் விதமாகக் கேட்கத் தெரிந்துவைத்திருக்கின்றன ஊடகங்கள். அரசாங்கங்களை எதிர்த்து எழுதுபவர்கள், பாடுபவர்கள், மேடையிலே பேசுகிறவர்கள் எல்லோரும் ‘பயங்கரவாதி’என்ற ஒற்றை அடையாளத்துள் அடைக்கப்படவேண்டியவர்கள். மேலும், ‘பயங்கரவாதி’களோடு சேர்ந்து இருக்கிற குழந்தைகளும் முதியவர்களும் வளர்ப்புப் பிராணிகளும்கூட அந்தச் சட்டகத்துள் அடைபட வேண்டியவர்களே என்பது மே 2009 முள்ளிவாய்க்காலில் எங்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

“விடுதலைப் புலிகளைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் சொல்ல வருவது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் பற்றி. அங்கே இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களைப் பற்றி, ஒவ்வொரு நாட்களும் கொல்லப்படும் சிறு குழந்தைகளைப் பற்றி. இலங்கை மட்டுமென்றில்லை; உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையின் கீழ் எல்லோருமே அதைத்தான் செய்துவருகிறார்கள். இலங்கை அரசாங்கம் புலிகளை அழித்தொழித்துவிட்டதாகச் சொல்கிறது. ஆனால், அவர்கள் கொன்றது அப்பாவித் தமிழ்மக்களையும் சேர்த்துத்தான். அதை உலகம் கண்டுங்காணாமல் இருந்துவிட்டது. அப்படிச் செய்வது தவறு என்று நான் சொன்னால் என்னைப் பயங்கரவாதி என்கிறார்கள்.” ‘கார்டியன்’பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார் மாயா.

“அவன் அவர்களைத் தான் அறிந்திருக்கவில்லை என்றான்
அங்கே அவன் இருக்கவுமில்லை;
அவர்களுக்கு அவனைத் தெரிந்திருக்கவுமில்லை
அவர்கள் ஒரு புகைப்படத்தைக் காட்டினார்கள்
‘நீ அந்த முஸ்லிம்களுடன் இருக்கவில்லையா?”

(மாயாவின் ‘சன்சவர்ஸ்’பாடலிலிருந்து)

“இலங்கையைப் பற்றிப் பேச்சு வந்துவிட்டால் மாயாவின் முன் அதிக நேரம் செலவழிக்க வேண்டியேற்படாது. அவர் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் வழக்கறிஞராகவே மாறிவிடுகிறார்” என்பது அவரை நேர்கண்டவர்கள் வியப்புக் கலந்து சொல்கிறார்கள்.

பாப் ராப்சனின் வார்த்தைகளையே மாயாவும் சொல்கிறார்.

“நான் எந்த மக்களிலிருந்து வந்தேனோ அந்த மக்களுக்காகப் பேசுகிறேன். அவ்வளவுதான்”

இலங்கை அரசாங்கம் மாயாவை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று குற்றஞ் சாட்டுகிறது. அமெரிக்க அரசாங்கமோ அவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவானவர் என்கிறது. மாயாவின் தந்தை பாலஸ்தீனத்தில் இராணுவப் பயிற்சி பெற்றார் என்ற காரணத்தால் பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கிறார் என்கின்றன சில ஊடகங்கள். தந்தையின் அரசியல் சிந்தனைகள் மாயாவின் தலைக்குள் புகுந்துகொண்டிருப்பதாக சில செய்தி ஏடுகள் எழுதின. தந்தையினது அரசியல் செயற்பாடுகளால் அவர் குடும்பத்தை விட்டு எப்போதும் விலகியே இருந்தார் என்று வருத்தத்தோடு கூறும் மாயா, தனது இளமைக்காலம் முதற்கொண்டு இலங்கை இராணுவத்தின் கொடுமைகளைக் கண்டு வளர்ந்த காரணத்தால் தான் தமிழ் மக்களுக்காகப் பரிந்து பேசுவதாகக் கூறுகிறார். பிரிட்டிஷ் பிரஜையான மாயாவுக்கு ஒரு தடவை அமெரிக்கா அரசாங்கம் தனது நாட்டினுள் நுழையும் அனுமதியை மறுத்திருக்கிறது.

‘மாயா பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதனால்தான் உயரிய விருதுகளை கைநழுவ விடுகிறார்’என்றும் சொல்லப்படுகிறது.

“நான் ஒரு இசைக்கலைஞராக இல்லாதிருந்தால், பல இலட்சம் தமிழ் மக்களுடைய குரல்களைப் போலவே என்னுடையதும் உலகின் செவிகளில் விழாது போயிருக்கும்”என்கிறார் மாயா.

2009ஆம் ஆண்டின் ஆளுமை மிகுந்த 100 நபர்களுள் ஒருவராக மாயாவை ‘ரைம்’சஞ்சிகை தேர்ந்தெடுத்தது. அந்த விருதினைப் பெறும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மாயா, வன்னியிலே இலங்கை அரசபடைகளால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று, அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந்த ஒபரா வின்ஃரேயின் (அமெரிக்காவில் மிக அதிகளவிலான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்துபவர்) கைகளைப் பிடித்து மிக உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். மேலும், இலங்கையின் தடுப்புமுகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களை விடுவிக்க உதவ வேண்டும் என ஐரோப்பிய யூனியனையும் கேட்டிருக்கிறார் மாயா.

கடந்த ஆண்டு (2010) ‘நியூயோர்க் ரைம்ஸ்’ உல்லாசப் பயணம் போகச் சிறந்த நாடுகள் என்று முப்பத்தியொரு நாடுகளின் பெயர்களைப் பரிந்துரைத்திருந்தது. அதில் இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருந்தது. மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் புகைப்படத்தை (குழந்தைகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்) தனது ‘ட்விட்டர்’இல் போட்ட மாயா, ‘இதுதான் நீங்கள் உல்லாசப் பயணம் போகச் சிறந்ததெனப் பரிந்துரைக்கும் கடற்கரை’என எழுதியிருந்தார்.

மாயாவின் ‘பேப்பர் பிளேன்ஸ்’என்ற தனிப்பாடல் ‘ஸ்லம்டோக் மில்லியனர்’படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானால் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அருளர், கலா, மாயா மேலும் இனி வெளிவரவிருக்கும் இசைத்தொகுப்பான ‘விக்கிலீக்ஸ்’யாவும் மாயாவை உலகளாவிய ரீதியில் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. கிராம்மி, ஆஸ்கார், மேர்க்குரி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

புகழின் உச்சத்தில் இருக்கும் இந்தப் பெண் மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

“எங்கள் மக்களை பேரினவாதிகளின் கொலைக்கரங்களிலிருந்து விடுவியுங்கள்”

பால் ராப்சனின் வாசகங்கள் உண்மைக்காகப் போராடிய அனைத்து கலைஞர்களின் மனதையும் பிரதிபலிக்கின்றன.

“கலைஞன் சார்புநிலை கொண்டிருத்தல் வேண்டும். அவன் அடிமைத்தனம், விடுதலை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் என்னுடையதைத் தேர்ந்துகொண்டேன். மாற்றுத் தெரிவுகள் ஏதுமில்லை”

அவர்களே கலைஞர்கள்!


நன்றி-அம்ருதா


தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் எழுதப்பட்டது.