5.19.2009

19.05.2009

இன்று
கண்கள் கண்ணீரில் மூழ்கி இறந்தன
காற்றை கண்முன்னால் யாரோ
திருடிக்கொண்டு போகிறார்கள்
நட்சத்திரங்கள் அறுந்து வீழ்ந்தன.

அழாதே என் தோழி!
அது அவனில்லை.
நாங்கள் பால்யத்தில் விளையாடித்திரிந்த
வீதிகளை இழந்தோம்
பூர்வீக வீடுகளிலிருந்து
தெருநாய்களைப் போல விரட்டப்பட்டோம்
நெல்மணிகளுக்குப் பதிலாக
கண்ணிவெடிகள் விதைக்கப்பட்ட
வயல்களைப் பிரிந்துவந்தோம்.
பிணங்களில் இடறிவிழுந்து
உடம்புக்குள் உயிர்
கூடுமறந்த குருவியெனப் பதகளிக்க
திசையெலாம் சிதறி விழுந்தோம்.
குடும்பப் புகைப்படம்…
கைப்பிடி மண்…
காதலனின் - காதலியின் கடிதம்…
யாதுமில்லை!

அவன் எங்களோடிருந்தான்
நாங்கள் உயிரோடிருந்தோம்
அவ்வளவே!

கண்களை நம்பாதே
நாசமாய்ப் போன கடவுளர் சாட்சியாய்
அது அவனில்லை.

ஏழுகோடித் தமிழர்களின் சொந்தக்காரன்
நந்திக்கடலோரம் நாதியற்றுக் கிடந்தானாம்
ஊடகக்காட்சிகளில் காறியுமிழ்ந்து சொல்
‘நாடகக்காரர்களை நம்பிலோம்’என்று.

மரணத்தை வென்றவன்
எங்கள் மானத்தின் காவலன்
தன்னுடலும் சரணடையச் சம்மதியாத
சரித்திர நாயகன்
சாய்ந்தானாம் என்றது
சாத்தான்களின் சதிவேலை!

கனவென்றுணர்ந்தும் கண்விழித்து
கதறியழுவதுபோல்
பொய்யென்று தெரிந்தும்
கண்ணில்பொங்குதே மாகடல்!

நீ அழாதே அம்மா!

கடல் வற்றிவிடுமென்று நீ நம்புகிறாயா?
இரவின் நீளம் ஓராண்டென்றால் ஒத்துக்கொள்வாயா?
பகலைச் சந்திரனும்
இரவைச் சூரியனும்
ஆளுமென்றால் ஆமாமென்றுரைப்பாயா?

தொழினுட்பம்
இழிநுட்பமானது இலங்கையில்தான்!

மகாவீரர்களுக்கு மரணமும் அஞ்சுகிறது
கோழைகளை அது வாழும் நாளெல்லாம்
வதைத்துக் கொல்கிறது.
சுடச் சுடப் பொன்னொளிரும்
எங்கள் மீட்பனும் அவ்விதமே.
காஸ்ட்ரோ சொன்னதே சரி!
'தோல்வியடைய நமக்கு அனுமதியில்லை'


கவிஞர் இளம்பிறைக்கு எழுதியது

13 comments:

kalyani said...

கண்களால் காண்பது பொய் .தீர விசாரித்து அறிவதே மெய் .
கனவென்றுணர்ந்தும் கண்விழித்துகதறியழுவதுபோல் பொய்யென்று தெரிந்தும் கண்ணில்பொங்குதே மாகடல்!. எத்தனை உண்மையான வரிகள் அக்கா.
இன்று தான். எங்கள் உண்மையான நிலையை அறிந்தோம் .அவன் இல்லையேல் நாங்களும் இல்லை என்றுணர்ந்த்தோம். .அப்பப்பா மீண்டும். இப்படியொரு நாள் வரவே கூடாது .

பதி said...

//தன்னுடலும் சரணடையச் சம்மதியாத
சரித்திர நாயகன்
சாய்ந்தானாம் என்றது
இழிசிங்களத்தின் சதிவேலை!//

ம்ம்ம்ம்ம்.. என்ன செய்ய சகோதரி... உண்மைகளை கண்ணீர்திரை மறைக்கும் போது உணர்சிகள் எதையும் நம்பத் தலைப்படுகின்றன...

இந்த பித்தலாட்ட நாடகத்திலுள்ள விசயங்களையும் அதன் பின்னனியையும் திரு ஒரு பதிவாக இட்டுள்ளார்...

http://aalamaram.blogspot.com/2009/05/blog-post_19.html

தமிழ்நதி said...

நன்றி கல்யாணி,

மிக உடைந்து போயிருந்தேன். யாருமற்ற அநாதைகளாக நாங்களெல்லாம் கைவிடப்பட்டோம் என்று கதறியழுதுகொண்டிருந்தேன். நீங்கள் தக்கசமயத்தில் உண்மையை உணர்த்தினீர்கள். 'அப்படியொரு நாள் இனி வரவேகூடாது'என்ற உங்கள் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.

பதி,

இப்படிக்கூடச் செய்யமுடியுமா என்று மனம் கொதிக்கிறது. இலங்கை அரசின் உளவியல் போரில் ஆடித்தான் போனோம். பித்தலாட்டக்காரர்களின் நாடகம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம். திருவின் பதிவு பார்த்தேன். நன்றாக இருக்கிறது. நாமொருநாள் நம்மூரில் கூடிக்களிக்கும் நாள் கூடாதா? வாராதா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

தவறிவிட்டாய் நீ
என்று
நொடிக்கொரு தரம்
உன்னை(க்) காட்டிக்கொண்டிருந்தாலும்
நம்ப மறுக்கிறது மனம்

ஒரு வேளை
உந்தன்
இந்த முகத்தை
காண நேரிடாவிடில்
நானும் நம்பியிருப்பேனோ
என்னவோ?

இன்னும்
எந்தன்
உள்ளுணர்வு
உரைத்துக்கொண்டுதானிருக்கிறது
நீ உயிரோடு
உலவுவதாக

இனம்புரியா
இளம்பிராயத்தில்
மட்டுமல்ல
இன்றும்
என்னுள் ஆதர்சநாயகனாய்
ஒளிர்பவன் நீ

செத்தவன்
பேசுவதாக
சொல்லும்
நவீன யுகத்தில்
உன்னைப் போலவே
ஒருவனைக் காட்டினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

கொன்றழித்தாலும்
மீண்டு(ம்) வரும்
அக்னிப் பறவை நீ

வருவாய்
என்ற நம்பிக்கைகளுடன்
காத்திருக்கும்
பல்லாயிரக்கணக்கானவர்களில்
நானும் ஒருவள்

சந்தனமுல்லை said...

இந்தக் கவிதையை நீங்கள் எனக்கும் சொன்னதாகக் கூட எடுத்துக் கொள்கிறேன் தமிழ்நதி!

//நாமொருநாள் நம்மூரில் கூடிக்களிக்கும் நாள் கூடாதா? வாராதா?//

கண்டிப்பாக வரும். அப்போது நானும் வருவேன், உங்கள் வீட்டுப்பூனைகளுடன் பொழுதைக் கழிக்க, பப்புவுடன்!!

vignathkumar said...

it is a very great loss to justies, my uncle cried for two days after hearing the sad and bad news.being a true tailean and tamil ray well wisher i cant even digest this dint expect this. all these things are happend by cheap tamilnadu and indian politicans.

தமிழ்நதி said...

அமித்து அம்மா,

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.:)எவர் ஒருவர் இல்லாவிட்டால் இந்த உலகம் இருண்டுபோகும் என்று நாம் நினைக்கிறோமோ, எவரை நினைத்தால் முணுக்கென்று கண்கள் பனிக்கிறதோ அவரே நாம் இவ்வுலகில் வாழ்வதன் பொருள். உலகிலுள்ள உண்மையான தமிழர்களுக்கெல்லாம் ஆதாரம். நம்பிக்கை.

அவசியம் வாருங்கள் சந்தனமுல்லை. 'புதினம்'என்கிற பூனை நான்கு குட்டிகள் போட்டது. ஒன்றுதான் இப்போது உயிருடன் இருக்கிறதாம். செம்மஞ்சள் நிறம் என்று அம்மா சொன்னார். பப்பு, அமித்து அம்மா, உமா ஷக்தி எல்லோரும் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு கட்டாயம் வரவேண்டும்.

யாரால் சகித்துக்கொள்ள இயலும் விக்னாத்... எங்கள் வீடு நேற்று இழவு வீடுபோலவே இருந்தது. அவ்வளவு பதறிப்போனோம். இப்படிக்கூட ஒரு நாடு செய்யமுடியுமா? எவ்வளவு அற்பத்தனம் இது.. என்று வியந்து மாளவில்லை. இந்தப் பொய்யிலிருந்து உலக நாடுகள் ஒன்றைத் தெரிந்துகொள்ளட்டும்... 'நாங்கள் தமிழர்களைக் கொல்லவில்லை... கொல்லவில்லை.. அவர்களைக் காப்பாற்றுகிறோம்'என்று சொல்வதெல்லாம் எத்தனை பொய் என்பதை இனியாவது உணரட்டும்.

மண்குதிரை said...

நரிக்கவிதையையும் வாசித்தேன்.

பகிர எதுவுமில்லை.

நம்பிக்கையூட்டும் செய்திகள் வருகின்றன.........

vignathkumar said...

mostly i oppose two things one in male domination in tamil society. another one is singlavan domination in sri lanka. i cant tolerate singlavan donination in srilanka which is oppose to basic human democrasy the singalan governmaent and its laws are un human in nature i dont know how those people tolerate this is there no human like mahama ganhi or periyar . iread u letter in kaumudham i asked ur adress also but dint get it. tamilnens should not leave the hope, the revot aganinst singlavan domination should take many new turn in many other forms through out the world tamil men and women should take part with many sprits people should get mare awerness about singlavans anti democratic politics which is done in srilanaka. it is a ind of human cheating.mam i request u not to loose the hope a bout tamileans feature in srilanka.

மிதக்கும்வெளி said...

விடுதலைப்புலிகள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் 'பிரபாகரன் மரணம்' என்ற செய்தியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் மூன்றுநாளாகியும் அதன் அழுத்தத்திலிருந்து மீளமுடியவில்லை. 'பிரபாகரன் உயிரோடிருதான் இருக்கிறார்' என்ற தகவல்கள் வழக்கமான புலி அபிமானிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கையிலிருந்து வருகிறதா என்ற சந்தேகமிருந்தாலும், 'பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும்" என்று மனசு துடிக்கிறது.

soorya said...

ம்..ம்..
மூச்செறிந்துவிட்டு,
மீண்டும் தொடர்வோம் கவலற்க..!
இதுவே யென்விதி.
இதற்கெனவே பிறந்துழன்று
சென்று செருக்களமாடி வா வென..,
இயம்பினர் எந்தையும் தாயும் என்
புகழுடைத் தலைவனும் தளபதிகளும்.
நானும் போவேன்.
நீ யும் வருவாய் அறிவேன் நான்.
...
நன்றி.

தமிழ்நதி said...

மண்குதிரை,

என்னதான் சொல்வது? வார்த்தைகளும் கைவிட்டுவிட்டன என்பதைத் தவிர. வரலாற்றின் முக்கியமான திருப்பத்தில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நன்றி விக்னாத்,

உங்கள் பின்னூட்டங்களிலிருந்து உங்கள் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆணாதிக்கத்திற்கெதிராகத் தொடர்ந்து ஒலிக்கும் உங்கள் குரலை அடையாளம் காணமுடிகிறது. எனது முகவரியை உங்கள் வலைப்பக்கத்தில் இடுகிறேன். நீங்கள் கூறியதுபோல உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும். ஜனநாயகம் என்பதன் பொருளே கேலிக்குரியதாகி வருகிறது. ஐ.நா.போன்ற அமைப்புகளின் நோக்கங்கள் ஐயத்திற்குரியதாக இருக்கின்றன.

திவாகர்,

"'பிரபாகரன் உயிரோடிருதான் இருக்கிறார்' என்ற தகவல்கள் வழக்கமான புலி அபிமானிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கையிலிருந்து வருகிறதா என்ற சந்தேகமிருந்தாலும், 'பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும்" என்று மனசு துடிக்கிறது."

இந்தத் துடிப்பு அதிகாரத்தை எதிர்க்கும் மனோபாவத்திலிருந்து பிறந்ததாக இருக்குமென்று நினைக்கிறேன். அதை நீங்கள் மறுவளமாகவும் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். விமர்சனங்கள் பல இருந்தபோதிலும் அவர் ஒரு ஆளுமையுடைய வீரன் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை, யார் மறுத்தாலும் நான் நூறு வீதம் நம்புகிறேன்.

சூரியா,

வழக்கமான நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மனதுக்குள் ஒரு எரிமலை கொதித்துக்கொண்டிருக்கிறது. தற்போதைக்கு உணர்ச்சிமயமான இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டெடுத்து அறிவுபூர்வமாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய நேரம். எப்போதும்போல வந்து பேசிக்கொண்டிருங்கள். பார்க்கலாம். விடியாத இரவு ஒன்று உண்டா என்ன?

vignathkumar said...

i na wont, and cant give muthukumars and other sacrifised tamil soles back so tamil peoples in foren countries only should deside this. do amirica and other nations respect i na ?
the real problume is between us and singlavan politics. i na s fare work is only for developed nations.hear after we should not only consentrate on fare ways to attack singalavan domination we should take all fare and fowl ways.