2.27.2009

ஒரு கண்ணீர்க் கடிதம்


எனது அன்பிற்குரிய வலையுலக நண்பர்களில் ஒருவர் ‘நீங்கள் ஒவ்வொரு நாட்களும் பதிவு போடவேண்டும்’என்று கேட்டுக்கொண்டார். அந்தக் ‘கொடுமையை’நீங்கள் ஒவ்வொரு நாட்களும் அனுபவிக்க வேண்டுமா என்ன என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அவரோடு நிறைய நாட்கள் பழக்கமில்லை ஆதலால் ‘போடுகிறேனே’என்று பவ்யமாக ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டேன். ஒவ்வொரு நாட்களும் பதிவிடுவது சாத்தியமில்லை என்றாலும், ஆங்காங்கே வெளிவரும் எனது படைப்புகளை வலைப்பூவில் இட்டுவைத்தால் ஒரு சேகரிப்பாகவேனும் இருக்குமல்லவா என்ற எண்ணத்தில் இதில் பதிந்துவைக்கிறேன். தூண்டிய நண்பருக்கு நன்றி.


பொங்கல் சமயத்தில் குமுதத்தில் வெளியாகியது

அன்புள்ள உங்களுக்கு,

சாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல்.
போரின் விளைவுகள் குறித்த எல்லா வார்த்தைகளும் எழுதி எழுதி தேய்ந்துவிட்டனவோ என்று அஞ்சுகிற அளவுக்கு அதைப் பற்றி நிறையப் பேசியாகிவிட்டது. பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்... நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். உண்ணாநிலைப் போராட்டங்கள், மனிதச் சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் விழியோரம் நீர்கசிந்தோம். எங்களுக்காகப் பரிந்து பேசும் வார்த்தைகளின் ஈரத்தில் நனைந்தோம். ஈற்றில் வழி பிறக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம்.

நம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக்கொண்டே போகிறது. இன்றோ நாளையோ இச்சுடர் அணைந்துவிடுமோ, நாங்கள் இருட்டுக்குள் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மறுபடியும் மேலிடவாரம்பித்திருக்கிறது. களத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களின் உளத்தில் உண்மை நிலையறியாத காரணத்தால் இடையறாத போர் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

மண்ணிலிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இல்லை. இராஜதந்திரப் பின்னகர்வாகவே வைத்துக்கொண்டாலும், கிளிநொச்சியில் ஆக்கிரமிப்பாளரது காலடிகள் பதிந்தன என்ற செய்தி உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனசில் விழுந்த பேரிடி. அன்றைக்கு எங்கள் நெஞ்சில் விழுந்த அனலின் சூடு இன்னமும் ஆறவில்லை. பேரினவாத இராணுவம் அடித்து விரட்டும்போது போய் ஆறுவதற்கென்று இருந்த ஒரு நிலப்பரப்பையும் சிறுகச் சிறுக இழக்கவேண்டி நேரிட்டால் இனி எமது மக்கள் எங்கேதான் செல்வது என்ற கலவரம், நம்பிக்கைகளையும் தாண்டி இதயத்தில் பரவுகிறது.

ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டுபோய்ச் செருகியிருக்கிறது சிறிலங்கா இராணுவம். பாதைகள் அடைபட்டிருக்கும் நிலையில் அத்தனை பேருக்குமான உணவை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? மருந்துக்கும் மருந்தில்லாத மண்ணாகி விட்டிருக்கிறது வன்னி. உயிர்காக்கும் ஆக்சிசன் உருளைகளைக்கூட அனுப்புவதை நிறுத்தி உயிர்க்காற்றையே மறுத்திருக்கிறார்கள் இதயமற்றவர்கள். காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கு தலைக்கு மேல் கூரைக்குப் பதிலாக பாம்புகள் தொங்குகின்றன. விஷம் கடித்து குழந்தை துடிக்கும்போது கொடுக்க மருந்தில்லாமல் சிறுகச் சிறுக அதன் உயிர்பிரிவதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் தாய்தந்தையரின் நெஞ்சம் வெடித்துச் சிதறாதா? ‘பசி… பசி…’என்ற சொல்லையே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் புத்தி பேதலித்துப் போகாதா? உழைத்துச் செழித்து வாழ்ந்த மக்களிடமிருந்து போர் மாற்றுடையையும் பிடுங்கிக்கொண்டு விட்டது. விக்கித்து வெறித்த பார்வையுடன் மர நிழல்களின் கீழும் வயல்வெளிகளுள்ளும் காடுகரம்பைகளிலும் செய்வதறியாது ஏங்கிக் காத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.

எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளலாம். அகதிகளாக மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதிகள் மீதும் குண்டுபோட்டுக் கொல்வதென்பது எந்தப் போரியல் விதிமுறைகளுள் அடங்கும்? இம்மாதம் எட்டாம் திகதியன்று இடம்பெயர்ந்து வீதியில் சென்றுகொண்டிருந்த மக்கள்மீது வன்னியின் வட்டக்கச்சி என்ற இடத்தில்வைத்து எறிகணை வீசி ஆறுபேரைக் கொன்றொழித்து இருபத்தொன்பது பேரைக் காயப்படுத்தியிருக்கிறது இராணுவம்.

எங்கள் குழந்தைகளின் பெயரால் கேட்டோம் ‘சகோதரர்களே காப்பாற்றுங்கள்’என்று. ‘தொப்பூள் கொடி உறவுகளே’என்று விளிக்கும் உங்கள் வாஞ்சையின்மீது நம்பிக்கை வைத்துக் கேட்டோம்… ‘எங்கள் பெண்களைச் சிதைத்துக் கொல்கிறார்கள். கைவிட்டுவிடாதீர்கள்’என்று. வயது வந்து பாடை ஏறாமல் பசியாலும் இடப்பெயர்வின் அலைக்கழிவாலும் மனச்சிதைவாலும் பாதியிலேயே முடிந்துபோகும் எங்கள் தாய்தந்தையருக்காக உங்கள் முன் இறைஞ்சினோம்.

ஈற்றில் என்ன? வழக்கம்போலவே நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோமோ என்று ஐயுறுகிறோம். இத்தனை கோடி சகோதரர்கள் குரல்கொடுத்தால் ஓடிவரும் தூரத்தில் இருந்தும், நாங்கள் நிராதரவாக, யாருமற்றவர்களாக தனித்துத் துயரப்பட விதிக்கப்பட்டோம். எத்தனையோ நாடுகளின் பக்கபலத்தோடு பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான போரை நடத்திக்கொண்டிருக்கிறது. கொடூரமான முறையில் திட்டமிட்டு இனவழிப்புச் செய்கிறது இலங்கை அரசாங்கம். கண்ணெதிரே சகோதரனின் நெஞ்சில் கத்தியால் குத்தும்போது கண்களை மூடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்குவதைப் போலிருக்கிறது இந்தியாவின் நிலைப்பாடு. இல்லை… அதனைக் காட்டிலும் மோசமாக, கத்தி முனை முறிந்தால் உபயோகப்படுத்தக் கொடுப்பதற்காய் கையில் உபகரணங்களோடு அருகிலேயே காத்துக் கிடக்கிறது.

தட்டிக் கேட்கும் தகுதி தமிழகத்திடம் இருந்தும் இன்னமும் தயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பூவுலகில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காட்டிலும் உயர்ந்தனவா நாற்காலிகள்? ஒரு இனத்தை அழித்தவர்களைப் பற்றி மட்டும் வரலாறு பதிவுசெய்யப் போவதில்லை. அழியவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மீதான பழியையுந்தான் அது எழுதிவைக்கவிருக்கிறது.

வாழும் கனவுகளை விழிகளில் சுமக்காமல் வலிகளைச் சுமக்கும் எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பள்ளிக்கூடங்களுக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பதுங்குகுழிகளுள் பாய்ந்தோடி ஒளியும் அவலத்திலிருந்து அவர்களை விடுவியுங்கள்.

பொங்கல் வருகிறது. அங்கே பட்டாசு வெடிக்காது. பால்சோறு பொங்காது. மாவிலை ஆடாது. மாக்கோலம் வாசல் காணாது. பட்டுப்பாவாடை அலையாடும் சிறுமிகளும் இரார். இடிந்த கோயில்களில் ஒற்றை விளக்குக்கூட ஒளிராது. எங்களளவில் அன்றைக்கும் கிழக்கு இருண்டுதான் கிடக்கும். ஏற்றக்கூடாதா சகோதரர்களே எங்களை நினைத்தும் ஒரு சுடரை? எஞ்சியிருக்கும் காலத்தையாவது நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோமே…!


நன்றி: குமுதம்

2.26.2009

தடுப்பு முகாம்கள்


சூரியன் மஞ்சளாய் சரியும்வேளையில்
கொலைக்களத்திலிருந்து புறப்படும் இராணுவ வாகனங்கள்
உயிருள்ள பிணங்களை
வீதியோரத்தில் கொணர்ந்து கொட்டுகின்றன.
இரவானதும்
தடுப்புமுகாம்களின் கம்பிவேலிகளுள்
இடமாற்றப்படுகின்றவர்களின்
அகலவிரிந்துறைந்த கண்களுள்
விழுந்துகொண்டிருக்கின்றன
சடலங்கள் மேலும் பல சடலங்கள்

‘மீட்கப்பட்டவர்களை’ஓளியிழை நாடாக்கள்
அவசரமாய் விழுங்குகின்றன.
நியாயப்படுத்தல்களுக்கு
முற்கூட்டியே தயாராயிருக்கும் பெருந்தகையீரின்
நிறைவான தலையசைப்பினை
புகைப்படக்காரனே! கவனத்திற் கொள்க.
ஒரு குழந்தையை கிச்சுக்கிச்சு மூட்டியேனும் சிரிக்கவை.
உணவருந்திக்கொண்டிருக்கும்
வயோதிப மாதொருத்தியின்
நன்றிப்பெருக்கில்
குவியட்டும் காமெராக்கண்.

கம்பிச்சுருள்களாலும் ஆட்காட்டிகளாலும்
வடிகட்டப்பட்ட சொற்களிலிருந்து
மகனைக் குறித்தொரு
தகவலும் கிட்டாமல்
நடைதளர்ந்து திரும்புகிறாள் தாயொருத்தி!

விசாரணைக்கென அழைத்துச்செல்லப்படும்
தேவதைகளின் முன்
முதலில் நீட்டப்படுவன துப்பாக்கிகள்
பிறகு....
உளியாய் பிளந்திறங்கும் குறிகள்!

தடுப்புமுகாம் சுவர்களின் சுற்றளவுக்குள்
தாயக எல்லைகளைச் சுருக்கிவிடும் சிரிப்பு
கன்னக்கதுப்புள் ஒளிந்திருக்க
தொலைக்காட்சியில் அழுதுவடிகின்றன நரிகள்.

அகதிகளை முன்னிறுத்திப் பிச்சையெடுக்கும்
அரச நிருபத்தை
கவனமாய் மிகக் கவனமாய்
பரிசீலி்த்துக்கொண்டிருக்கிறது சர்வதேசம்.

நன்றி: உயிரோசை

2.22.2009

விழாக்காலத் துயரம்


எனது கதை, கவிதைகளில் நந்திதா என்ற பெயரை விளித்துப் பேசுவது வழக்கம். இந்தக் கவிதையிலும் நந்திதா இருக்கிறாள். பொங்கலையொட்டி எழுதப்பட்ட கவிதை இது.


நம்பிக்கையின் நாடித்துடிப்பு
மெல்ல மெல்ல
அடங்கிக்கொண்டு வருகிறது நந்திதா!

தேய்ந்த சொற்களால்
வழிந்து தீராத கண்ணீரை எழுதுகிறேன்.

நீல ஒளியுமிழும் சரவிளக்குகள்
மரங்கள் தோறும் காய்த்துத் தொங்கும்
இந்தத் திருவிழாத் தெருக்களில்
நானும் ஞாபகமும் நேற்றிரவு நடந்துபோனோம்.

அழகிய போர்வையாய் பனிபடர்ந்திருக்க
குளிரும் நிலவுமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது இந்நிலம்.
தொலைவில் ஒலித்த துள்ளிசைக்கிணங்க

ஆடியபடி போயிற்று
கடலை வண்டியின் காடாவிளக்கு

இந்தப் பண்டிகை நாட்களில் என் அன்பே!
நமதூரின் எந்தப் பதுங்குகுழியில்
பதைக்கும் விழிகளோடு உயிர்தரித்திருக்கிறாய்?
வாழிடம் சுருங்கிப்போன இக்கொடுங்காலத்தில்
சாவின் சாத்தியங்கள் விரிந்துவிட்டன.
பறவைகளை இழந்த வானத்திலிருந்து
எந்தக் கணமும்
மரணம் சிறகுதழைத்திறங்கலாம்.

நேற்று
பொங்கலின் இனிப்பேந்தி வந்த குறுஞ்செய்திக்கெல்லாம்
குற்றவுணர்வோடு பதில் அனுப்பினேன்
நேற்று வழக்கத்தைக்காட்டிலும்
நிறையவே சம்பிரதாய வார்த்தைகளைப் பேசினேன்
நேற்று அனைத்து தொலைக்காட்சிகளிலும்
யாரோ ஒரு நடிகர் யாரோ ஒரு நடிகை
தொடர்ந்து பொங்கலைச் சிறப்பித்துக்கொண்டேயிருந்தார்கள்

நேற்று
நமது குழந்தைகளுக்கு உணவு கிடைத்ததா?
நேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்
குருதி ஒட்டியிருந்ததா?
பொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு
வேறொரு மரத்தடிக்கோ வயல்வெளிக்கோ
இடம்பெயர்ந்து போனாயா?

நந்திதா!
நாதஸ்வரமும் மேளச்சத்தமும் கலந்தொலிக்கும்
இத்திருவிழா நாட்களில்
கோயில் கேணி பிரதிபலித்த
நம் தலைகீழ்பிம்பங்கள் போலாயிற்று வாழ்க்கை!

அறிவுஜீவிகள் மெளனம் பழகுகிறார்கள்
அரசியல்வாதிகள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
அன்றன்றைய வாழ்வை
இழக்க விரும்பாத மக்களோ
சிறையிருளின் கனத்த காலணிகளை
கனவிலும் அஞ்சினர்.

பூர்வீக கலைகளை
அழியவிடாமல் விழா எடுத்துப் பாதுகாக்கும் இம்மண்ணில்
நந்திதா! நான் நம்புகிறேன்
ஈழத்தமிழர்களின் சாம்பலும்
காலத்தால் அழிபடாத தாழியொன்றில்
பத்திரமாய்த்தானிருக்கும்.



நன்றி: உன்னதம்

2.21.2009

மாபெரும் ஒன்றுகூடல் - பெப்ரவரி 22 (இன்று - ஞாயிற்றுக்கிழமை)

அன்பு நண்பர்களுக்கு,

வலைப்பூவில் பிரசுரிக்க அனுப்பப்பட்டதில் எழுதியிருப்பது போல எல்லாவற்றைக் குறித்தும் பேசியாயிற்று. இருந்தாலும், ஒன்றுமே பேசப்படாததுபோல ஒரு வெளி நமக்கு முன் விழுந்துகிடக்கிறது. மக்கள் எழுச்சியால் மட்டுமே இதை நிரவ முடியும். நம்மால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உண்மை. ஆனால், ஏதேனும் செய்யாமல் கைகளைக் கட்டிக்கொண்டிருப்பதும் மனிதம் என்ற சொல்லுக்கே இழுக்கானதல்லவா? வாருங்கள்... இந்தப் பேரணியில் ஒன்றிணைந்து நடப்போம். ஏதாவது நடக்கிறதா பார்ப்போம். அதிகாரத்தின் மெளனத்தை மக்களின் இரைச்சல் அசைக்கிறதா பார்க்கலாம்.

----------------------------------

மாபெரும் ஒன்றுகூடல்
சென்னை பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை
- இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,

நிறைய பேசியாயிற்று
நிறைய விவாதித்தாயிற்று

மனிதாபிமானம் பற்றி
தற்கொடைப்பற்றி
தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி
தற்கொலையின் தியாகம் பற்றி

ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி
அதன் துன்பியல் பற்றி
அதன் மர்மங்கள் பற்றி
இந்திய தேச இறையாண்மைப்பற்றி

தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி
அவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி
அந்த தடையின் நியாயங்கள் பற்றி

அந்த தடையை உடைப்பதைப் பற்றி


இனவெறுப்புகள் பற்றி
மனிதக்கேடயங்கள் பற்றி
பாதுகாப்பு வலையம் பற்றி
Cocentration Camp பற்றி

இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி
தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி
இந்தியனாய் இனைவோம் பற்றி
தமிழனாய் எழுவோம் பற்றி

பயங்கரவாதிகள் பற்றி
விடுதலைப்போராளிகள் பற்றி
மதவெறிகளைப்பற்றி
எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி

எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்
அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை
பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை

நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய்
4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய்
இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு

‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’


எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி

குடும்பத்தோடு வாருங்கள்.
இந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.
2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.


இதுவரை வர அழைப்பு விடப்பட்டவர்கள் மற்றும் சம்மதித்திருப்பவர்கள்

1.இந்த மதம் சார்ந்த அமைப்புகள் (வாழும்கலை (ART OF LIVING),), இன்னும் பிற அமைப்புகள்
2. முஸ்லீம் மதம் சார்ந்த மதத்தலைவர்கள் மற்றும் அமைப்பினர்
3. எல்லா கிருஸ்து அமைப்புகள்
4. புத்த பிக்குகள்
5. திராவிடர் கழகம் (கட்சிகள் அல்ல)
6. மருத்துவர்கள் அமைப்புகள்
6. பொறியாளர் சங்கம்
7. வணிகர் சங்கங்கள்
8.ஆட்டோ ஓட்டுனர்கள்
9. அரசுத்துறை ஊழியர்கள்
10. அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு
11. விளையாட்டுதுறை சார்ந்த சங்கங்கள்
12 .கலைத்துறையினர் (நடிகர் சங்கம், துனை நடிகர் சங்கம், இயங்குனர்கள் இன்னபிற)
13.தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
14. வணிக நிறுவனங்கள்
15. அனைத்து மீனவ அமைப்புகள்
16. பத்திரிக்கையாளர்கள்
17. பதிவர்கள்
இன்ன பிற அமைப்புகளும்…

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல
ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்

இலக்குவண்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்
www.indiansagainstgenocide.org

2.19.2009

போர்க்களமானது சென்னை உயர்நீதிமன்றம்:வழக்கறிஞர்கள்-காவற்துறையினர் மோதல்

நேற்றிரவு இடப்பட்ட இந்தப் பதிவு என்ன காரணத்தினாலோ தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை. எனக்கும் வைரசுக்குமான போராட்டத்தில் அது என்னைத் தோற்கடித்திருக்கலாம். மீள்பதிவாக முயற்சிக்கிறேன்.

முத்துக்குமார் தன்னைக் கொளுத்தி தமிழக மக்கள் மனங்களில் ஒரு சுடரை ஏற்றிவைத்துவிட்டுப் போனான். அது இத்தனை தூரம் பற்றிப்படருதல் கூடுமா என்பதில் அவனுக்கே கூட ஐயம் இருந்திருக்கும். ஆனால், நிறையப் புத்தகங்களில் அவன் அதிசயங்களை வாசித்திருப்பான். அதிசயங்கள் தமிழகத்திலும் நடக்கலாமென கனவு கண்டிருப்பான். அதனால்தான் அத்தனை தெளிவாய், தீர்மானமாய், அவ்வளவு நிதானமாய் திட்டமிட்டு ஒரு கடிதத்தை எழுதிவைத்து மிக அழகாய் செத்துப்போனான். சாஸ்திரி பவனின் முன்னால் தனதுடம்பில் முத்துக்குமார் வைத்த தீ, இன்று சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் பற்றியெரியப் பார்த்தோம்.

“காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டம் என்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதரவான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும் (சட்டக் கல்லூரி மாணவர்கள்) வழக்கறிஞர்களும்தான்” என்று எழுதிவைத்துப் போனான் முத்துக்குமார். ‘வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களே’, ‘காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே’, ‘நம்பிக்கைக்குரிய ஒபாமாவே’ என்றெல்லாம் முத்துக்குமார் நிறையப்பேரை விளித்திருந்தாலும் நன்றாகக் காதுகேட்டதென்னவோ மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும்தான்.

இன்று நடந்தது போன்ற அல்லோலகல்லோலத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் என்றும் கண்டிராது. பெருந்தகையாளர் சுப்பிரமணியசுவாமி அவர்கள் மீது முட்டை வீசிய குற்றத்திற்காக வழக்கறிஞர்கள் பதினாறு பேர் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்யத் தேடியிருக்கிறது காவற்துறை. ‘சுப்பிரமணியசுவாமி மீது நான் ஒரு வழக்குப் போட்டிருக்கிறேன். அவரைக் கைதுசெய்துவிட்டு எங்களைக் கைதுசெய்ய வாருங்கள்’என்றிருக்கிறார் ஒரு வழக்கறிஞர். முதலில் சொற்கள் பறந்திருக்கின்றன. பிறகு இரு தரப்பிலிருந்தும் கற்களும் செருப்புகளும் பறக்கவாரம்பித்தன. உடனடியாக மேலதிக பொலிசார் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்த பொலிஸ் நிலையத்திற்கு வழக்கறிஞர்கள் தீ வைத்துவிட்டார்கள். நெருப்பிற்கு கைதுசெய்யப்படுவோமென்ற அச்சமில்லை. அது ஆயிரம் நாக்குகளால் எரியவாரம்பித்துவிட்டது. அணைக்க வந்த தீயணைக்கும் படையினரையும் வழக்கறிஞர்கள் ‘போங்கய்யா வேலையப் பாத்துக்கிட்டு’என்றுவிட்டார்கள். வழக்கறிஞர்கள் கல்லை விட்டெறிய பதிலுக்கு பொலிசார் கல்லை விட்டெறிய இடைநடுவில் கிடந்தது பதினைந்தடிக்கும் குறைவான தூரம். நீதிமன்ற வளாகத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றன பொலிசாரின் லத்தியால் அடித்து நொருக்கப்பட்டன. வாகனங்கள் மட்டுமல்லாது வழக்கறிஞர்களின் மண்டைகளையும் பதம்பார்த்தன லத்திகள். போதாக்குறைக்கு செய்தியாக்க வந்த நிருபர்மீதும் சட்டம் பாய்ந்திருக்கிறது. மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் சேதுராமன், தமிழ்ச்சுடர் நிருபர், என்.டி.ரி.வி. செய்தியாளர் மதுபாரதி இவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த கல்லால் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு மண்டையில் காயம். எதிரெதிர் நின்று ஒருவரையொரு கற்களாலும் சொற்களாலும் தாக்கிக்கொண்டிருந்ததுபோய், திடீரென்று பொலிசார் வழக்கறிஞர்களை நோக்கி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள். பிறகு லத்திகள், காப்புத் தடுப்புகள் சகிதம் வழக்கறிஞர்களை நோக்கிப் பாய்ந்தோடினார்கள். வழக்கறிஞர்கள் பின்னடைந்து நீதிமன்றக் கட்டிடத்தினுள் புகுந்துகொண்டார்கள். அங்கு வைத்து வழக்கறிஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. துணை ஆணையர் உட்பட 20 பொலிசாருக்குக் காயம் என்று செய்தி சொல்கிறது. வழக்கறிஞர்களில் எத்தனை பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. உடைக்கப்பட்ட கார்களின் முன்நின்று ‘பொலிஸ் அராஜகம் ஒழிக’என்று சிலர் கத்திக்கொண்டிருந்தார்கள். ‘மக்களையோ செய்தியாளர்களையோ உள்ளே விடாமல் வாயில்களெல்லாவற்றையும் பொலிசார் மறித்துநிற்கின்றனர். எமர்ஜென்சி சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது போலிருக்கிறது’என்கிறார் ‘களத்திலிருந்து’ சகபதிவரும் நிருபருமான நண்பர் ஒருவர்.

‘தி.மு.க. அரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துபோய்விட்டது’என்று வருந்துவதற்கு ஜெயலலிதா அம்மையாருக்கு மேலும் ஓர் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.
‘வழக்கறிஞர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும்’என்று ஆட்சியாளர் தரப்பில் சொல்லப்படலாம்.
‘பயங்கரவாதத்திற்கு வழக்கறிஞர்கள் துணை போகிறார்கள்’என்று நாளை ஹிந்து எழுதும்.
நான்கைந்து பதிவுகள் இதுதொடர்பாய் இடப்படும்.
அனைத்து பத்திரிகைகளிலும் நாளை தலைப்புச் செய்தியாக இதுவே இடம்பெறும்.
தொலைக்காட்சிகள் கொஞ்ச நாட்களுக்கு தத்தம் சார்புநிலைக்கேற்ப இப்பிரச்சனையைப் பேசிக்கொண்டிருக்கும்.
இப்படித்தான் இது நடக்கும் என்று எல்லாவற்றையும் எழுதிவிட முடிகிறது முத்துக்குமார் போன்ற அசாதாரணர்கள் வந்து அசைக்கும்வரை.

2.18.2009

ஒரு பயணம்… சில குறிப்புகள்…



விமானம் கொழும்பில் தரையிறங்கப்போகிறது என்றதும், வழக்கமாக ஒரு குதூகலம் பற்றிக்கொள்ளும். அதுநேரம்வரை ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்த காலம் ஒரே முள்ளில் உறைந்ததுபோலாகிவிடும். வாய்கொள்ளாமல் அள்ளித் தின்னச் சொல்லி ஆவலாதி கூட்டும் பஞ்சுப்பொதி மேகங்களினூடே தளம்பித் தெரியும் கடலும் தென்னை மரங்களும் அழகின் பரவசத்தில் மூழ்கடிப்பன. இம்முறையும் அதே நிலம், அதே நிறங்கள்… பார்வை மட்டுமே வேறு. இங்கே மரணம் இருந்தாற்போல வந்து குதிக்கவில்லை என்றபோதிலும், பார்த்துக்கொண்டிருப்பவர் முகத்தில் இரத்தமும் நிணமும் தெறித்துப் பதைபதைக்க வைக்கும் வெட்டுப்பாறையாக இந்நிலத்தை உணர்வது இதுவே முதன்முறை.

போர் நடக்கும் தேசம் என்பதை, ஓடுபாதை நெடுகிலும் காணக்கிடைத்த மணல்மூட்டைகள் அடுக்கப்பட்ட கரும்பச்சை நிறக் காவலரண்கள் ஞாபகமூட்டிக்கொண்டிருந்தன. விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் விசாரணைச் சாவடிகளில் அடையாள அட்டைகளையும் பைகளையும் பரிசோதித்துக்கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர் (?) தென்பட்டார்கள். போரின் விளைவுகளிலொன்றாய் வீதிகளில் பல போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் காரணத்தால், கொழும்பினுள் திரிவதென்பது சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் செயலாயிருக்கிறது. காலிமுகக் கடற்கரையை அண்டிய ஒரு பகுதி ‘உயர் பாதுகாப்பு வலயம்’என்ற அறிவிப்புடன் இராணுவத்தினர் மொய்த்திருக்கக் காணப்பட்டது. அலரி மாளிகைக்கு முன்னால் ஒரு குஞ்சும் செல்லவியலாது. அதன் முன் அமைக்கப்பட்டிருக்கும் உயரமான காவலரண்களில் துப்பாக்கிகள் கண்துஞ்சாது உறுத்து விழித்திருக்கின்றன.

எத்தனை அழகிய நாடு! ஐரோப்பிய மேட்டுக்குடித்தனத்தின் நாகரிகம் பூசிய கட்டிடங்கள், மரப்பச்சை குளிர்விக்கும் சாலைகள், நாற்சந்திகளின் மையங்களை அலங்கரிக்கும் பூச்செடிகள், மேலைநாடுகளுக்குச் சற்றும் குறைவுபடாத வசதிகளை உள்ளடக்கிய நகரம்…. காற்றில் பயத்துணிக்கைகள் விசிறப்பட்டிருக்க இயங்கிக்கொண்டிருந்தது. எந்நேரமும் எவ்விடத்திலும் குண்டு வெடிக்கலாம் என்ற பிடரிக்கூச்சம் எல்லோருள்ளும் இருக்கவே இருக்கும். அம்புலன்ஸ் வண்டி அபாய ஒலியெழுப்பியபடி விரையும்போது, அடியில் படிந்திருக்கும் பயவண்டல் ஒரு கணம் கலங்கி மேலெழுந்து அடங்குகிறது.

தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் சனநெரிசல் முன்னரிலும் குறைவாக இருப்பதாகத் தோன்றியதற்கு, பயத்தின் கண்களால் நான் பார்த்ததுகூடக் காரணமாயிருக்கலாம். கிளம்பிக்கொண்டிருக்கிற புகையிரதத்தை ஓடிப்பிடிக்க எத்தனித்தவர்கள்போல விரையும் சாலையோர ஓட்டக்காரர்கள் குறைந்து போனதாய் தோன்றியது. ஏறக்குறைய யாருமற்ற பின்மதிய வீதிகளை விடுதியறையிலிருந்து பார்க்க நேர்ந்தது புதிய அனுபவம்.

வன்னியைப் பொறுத்தளவில் உணவு, மருந்து மற்றும் கருணைக்குத் தடை என்றால், கொழும்புவாழ் தமிழர்களுக்கு செய்திகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகள் அவதானமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பேசுகின்றன. கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் நேரம் மட்டும் திரை வான நீலமாகி மௌனித்துவிடுகிறது. ‘ஏன்?’ என்று கேட்டேன். ‘அது அப்படித்தான்’என்றார்கள். வீட்டுக்குள் தொலைக்காட்சி உண்மைகளைக் கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்களை ‘செய்திக் குருடர்’களாக்கி வைத்திருக்கிறது அரசாங்கம். ‘நேத்ர’என்ற தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பாகும் செய்திகளை மட்டுமே அவர்களால் பார்க்க, கேட்க முடியும். அது அரசாங்கத்தால் நடத்தப்படும், அரசாங்கத்துக்கு உவப்பான செய்திகளை ஒளிபரப்பும் ஒரு நிலையம். நான் போன வீட்டில் ‘நாங்கள் அதைப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் அப்பட்டமான பொய்களைக் கேட்க எரிச்சலாக இருக்கிறது’என்றார்கள். இதைக்கூட எழுந்து, முன் கதவை மூடிவிட்டே அவர்களால் சொல்லமுடிந்தது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் ‘மக்கள்’ தொலைக்காட்சி இனப்படுகொலையின் மீது வெளிச்சம் விழுத்தியது என்ற காரணத்தால், அதற்கும் இலங்கையில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பதாக இங்கு வந்து சேர்ந்ததும் பார்த்த செய்தியின் வழி அறியமுடிந்தது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக, வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொல்லும் ஒரு நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது மேலதிகமான ஆடம்பரத் தேவைதான்.

ஆக, அரசாங்கத்தின் மூளையால் சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மறுத்தால் பிடித்து அடைத்துவிடுகிறார்கள். அல்லது லசந்த விக்கிரமசிங்காவைக் கொன்றதுபோல கொன்றுவிடுகிறார்கள். உண்மையைப் பேசுவதைக் காட்டிலும் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லையா?
=== ==== =====

‘திருடன் வேண்டுமென்றே சில தடயங்களை விட்டுச்செல்கிறான். அவன் உள்மனதில் பிடிபடும் ஆசை இருக்கும்போல…’என்று யாரோ (சுஜாதா என்றே நினைக்கிறேன்) எழுதியிருந்ததை எப்போதோ வாசித்த ஞாபகம். நம் எல்லோருக்குள்ளும் சாகசம் நோக்கிய குறுகுறுப்பு இருக்கத்தான் இருக்கிறது. என்னைப் போன்றவர்களின் மிகப்பெரிய துயரம் யாதெனில், இலங்கையிலுள்ள வீடுகளுக்குச் செல்வதே ஒரு சாகசமாகவும் சாதனையாகவும் ஆகிவிட்டிருப்பதுதான். ‘வராதே… வராதே…’என்று பயத்தோடு சொன்ன அம்மாவின் குரலில் ‘வர மாட்டாளா என் பிள்ளை!’என்ற ஏக்கம் ஒளிந்திருந்தது.

நாடோடிகள் பயணங்களால் உயிர்வாழ்கிறார்கள். குறிப்பாக வீடுகளில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும் பெண்களுக்கு பயணம் ஒரு விடுதலை, கொண்டாட்டம், உற்சவம். விமானம், கார், பேருந்தைவிட புகையிரதப் பயணங்களில், வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்துபோயிருக்கும் எங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடிகிறது. மாசி மாதப் பனி நிலத்திலிருந்து இரண்டடிக்கு மேல் செறிந்து அடர்ந்திருக்க, உள்ளங்காலுக்குள் குளிர் குறுகுறுக்க, பூ மலர்வதுபோல பொழுது மெல்ல மெல்ல அவிழ்வதைப் பார்த்தபடி பயணித்தேன். வழியெல்லாம் ஒரே நினைவு கூடக் கூட ஓடிவந்தது. ‘என்ன ஒரு அழகிய நாடு இது… ஐயோ! போர் தின்று அழிகிறதே…!’

தாமரைக் குளங்கள், விழுந்து புரளத் தூண்டும் பச்சை வயல்வெளிகள், தன் இருப்பைப் பல மைல்களுக்கு முன்னமேயே செழிப்பின் வழி கர்வத்தோடு அறிவித்து ஓடும் ஆறுகள், வெடித்த பஞ்சுகள் வெண்கொக்குகளாய் தொங்கிக்கொண்டிருக்கும் இலவமரங்கள், இப்பூமியில் வந்துதித்ததே கடக்கும் புகையிரதத்திற்குக் கைகாட்டுவதற்குத்தான் என்பதேபோல் முகமெல்லாம் விகசித்திருக்கக் கையசைக்கும் சிறுபிள்ளைகள்….

வெயிலின் அதிகாரத்தின் முன் பணிந்து கலைகிறது பனி. இருந்தாலும், தாய்மையின் கனிவோடு காற்றில் குளிரை விட்டுவிட்டே செல்கிறது. கவிஞர் சுகுமாரனின் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’இப்போது கூடவே வருகிறது. தன்னுணர்வு மிகுந்த இயல்பின் எழுத்து அது. மிகைப்படக் கூறும் வழக்கமில்லை. இருந்தபோதிலும், திடீரென உணர்ச்சிச் சுழியில் நம்மைச் சிக்கிச் சுழலவைத்துவிடும் தன்மையது. சுகுமாரன் அவர்களின் கட்டுரைகளில் கடைசி வாக்கியங்கள் முக்கியமானவை. மிகப் பிடித்த ஒரு பாட்டின் நாத அதிர்வு பாடல் ஓய்ந்தபிறகும் அறையினுள் சுழன்றுகொண்டிருப்பதுபோல வலியும் சுகமுமான அனுபவத்தைத் தந்தது ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’. (உயிர்மை வெளியீடு)
=== ==== ====

வீடுகளுக்கும் உயிர் இருக்குமென்று நான் நம்புவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை. மரங்களால் செடிகொடிகளால் யாவற்றையும் உணரக்கூடுமென்றுகூட நம்புகிறேன். பூனைகள் விசுவாசமற்றவை என்று யாராவது சொன்னால் என்னால் ஆதாரங்களோடு மறுத்துரைக்க முடியும். நாய்களின் ஞாபகசக்தி மனிதர்களுக்கு ஏனில்லை?

வீட்டில் இருப்பது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது! அதைப் பிரிந்திருக்க விதிக்கப்பட்டிருப்பது எத்தனை துயரளிக்கிறது!

வாழமுடியாத என் வாழ்நிலமே! உன்னை நான் ஒருக்காலும் மறந்துபோகேன். இருந்தாலும், உன்னை எழுத்தில் ஏற்றியும் போற்றியும் வைத்திருக்க விரும்புகிறேன். வஞ்சனைகள் சூழ்ந்து துயரம் என் கழுத்திறுக்கும்போது உனது மடியில் நான் படுத்துக்கொள்வேன். என்மீது கவிழ்ந்து மூடட்டும் உன் எல்லையற்ற கருணையின் கதகதப்பு. எழுத்தின் ஒழுங்கமைவுகளுக்குக் கட்டுப்படாது கோர்வையற்று நான் நினைக்கிறாற்போல உன்னை எழுதவிரும்புகிறேன். எனக்காக பாசாங்கற்று எப்போதாவதுதான் எழுதமுடிகிறது.

இளஞ்சிவப்பு லசந்தரா என்ன காரணத்தினாலோ பட்டுப்போய்விட்டது. குருதிநிற லசந்தராவும் வெள்ளை லசந்தராவும் கொஞ்சமாய் பூத்திருக்கின்றன. நித்தியகல்யாணி நிறைய மொட்டு விட்டிருக்கிறது. மொட்டைமாடியிலிருந்து பார்க்கும்போது ஒளிர்ந்த வெள்ளை நிறத் தேமா மலர்களின் மீது காரணந் தெரிந்த கோபம். பாவம் அது என்ன செய்தது? சதா கண்மூடியிருக்கும் புத்தரை நினைவுறுத்துவதைத் தவிர. புத்தரால் செய்யத் தக்கதும் ஒன்றுமில்லை. பஞ்சசீலத்தை மறந்தவர்களால் வணங்கப்படும் கொடுவிதிக்கு ஆளானது அவரது குற்றமல்லவே! ஈரப்பலா செடியொன்று மதாளித்த இலைகளுடன் ‘நானும் நானும்’என்று வளர்கிறது. வீட்டின் பின்புறத்திலுள்ள அம்பரலங்காய் மரம் உயர்ந்து கிளைகளை நீட்டி தண்ணீர்த் தொட்டிக்குப் போகும் படிகளை மறைத்துக்கிடக்கிறது. ஜாம் மரத்தின் கிளைகள் முற்றத்தின் பெரும் பகுதியில் நிழல் படர்த்துகின்றன. நான் வரமுடியாமற்போன இந்த ஒன்றரை வருசத்தில் செவ்விளநீர் மரங்கள் குலைகுலையாய் காய்த்து, பாரந்தாங்காமல் சில குலைகள் முறிந்து வீழ்ந்ததாகச் சொன்னார்கள். ‘உனக்கு எங்கள் வீட்டு மாதுளம் பழம் சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லை’என்றார் அப்பா. இழந்தது மாதுளம்பழங்களை மட்டுமா?

விடிகாலையில் கையில் தேநீர்க் குவளையோடு செடிகொடிகளோடு பேசும் வழக்கத்தை மாநகர வாழ்வு விழுங்கிவிட்டது.

பொன்னி நாய்க்கு வயதுபோய்விட்டது. சின்ன வெடிச்சத்தம் கேட்டாலும் வீட்டுக்குள் ஓடிவந்து ஒளிந்துகொள்கிறதாம். என்னைக் கண்டதும் மற்ற இரண்டு நாய்களும் தோள்வரை எகிறின. பொன்னி மட்டும் நாணமுள்ள பெண்பிள்ளை போல கால்களைப் பின்னிக்கொண்டு தள்ளித் தள்ளி நின்றது. பிள்ளைகள் பிறந்து அவற்றுக்கு விருத்தெரிந்ததும் எங்கள் வீட்டை விட்டு பக்கத்து வீட்டுக்குக் குடிபெயர்ந்து போய்விட்ட பூக்குட்டியை அதன் ‘புகுந்த வீட்டில்’ போய்ப் பார்த்தேன். நான் போட்ட சாப்பாட்டை மிக விரைவாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு பஞ்சுக்குவியலாக மடியில் படுத்திருந்தது. ஒரு காலத்தில் அது எத்தனை செல்லமாயிருந்தது என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பனிபொழியும் அந்த இரவில் நான் நீண்ட நேரமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். இனி அது அவர்களின் மீன்பொரியலைக் களவெடுத்துச் சாப்பிட்டாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

மை தீட்டப்பட்டதுபோன்ற கரிய அழகிய கண்களை அகல விரித்து எல்லோரையும், எல்லாவற்றையும் குட்டியாயிருந்தபோது விடுப்புப் பார்த்த காரணத்தால் ‘புதினம்’என்று எங்களால் நாமகரணம் சூட்டப்பட்ட பூனைக்குட்டி இம்முறையும் நிறைமாதக் கர்ப்பிணி. போன தடவை நான் போனபோது எனது காலடியில் குட்டிகளை ஈன்று, பூனை பற்றிய கற்பிதங்களைத் தகர்த்தெறிந்திருந்தது. போன நிமிடத்திலிருந்து என் பின்னாலேயே திரிந்தது. தூக்கி வைத்து வயிற்றைத் தடவிக் கொடுக்க சின்ன அனுக்கமாக ‘மியாவ்’என்றது. ஒவ்வொரு தடவலுக்கும் ஒவ்வொரு மியாவ். இரவு உறங்கப்போனபோது பூட்டப்பட்ட எனது அறைக்கதவின் முன் தவங்கிடந்தது. காலையில் ஆறு மணிக்கே சுப்ரபாதம் பாடித் துயிலெழுப்பிவிட்டது. ‘பார்த்துப் பார்த்துச் சாப்பாடு வைத்தும் உனக்குப் பின்னால்தானே திரிகிறது’என்றார் அம்மா வருத்தமும் பெருமிதமும் ஒருசேரத் தொனிக்க. எனது அறை வாசலில் சோர்ந்து போய்ப் படுத்திருக்கும் புதினத்தை நினைத்துப் பார்க்க, அந்தப் பட்டுக் குஞ்சுக்காக என்றாலும் போர் நின்றுபோகலாகாதா என்று ஏங்குகிறேன். ‘எத்தனை மனித உயிர்கள், உடமைகளுக்கில்லாத முக்கியத்துவமா பூனைக்குட்டிக்கு?’என்று நீங்கள் கேட்பீர்கள். மனித உயிர் உயர்வானது@ ஏனையவை அதனிலும் குறைவு என்பதுகூட நம்மால் கட்டமைக்கப்பட்டதுதானே…?பூனைகளதும் நாய்களதும் உலகத்தைத் திருடும் உரிமையை மனிதர்களாகிய நம்மிடம் கையளித்தது யார்?
=== ==== ====

இந்தப் பந்தியை எழுதத் தொடங்கும் முன் வவுனியா என்பது வேறு வன்னி என்பது வேறு என்பதைச் (அறியாதவர்களுக்கு) சொல்லிவிடுகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு இவைகள்தாம் வன்னிப்பகுதி. வவுனியா என்ற இடம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியில் வன்னிக்குச் சற்று முன்னதாக இருக்கிறது. வவுனியா இப்போது அகதிகளின் நகரமாகிவருவதுதான் செய்தி. வவுனியாவில் வாழ்பவர்கள், போர் நடக்கும் வன்னியிலிருந்து கொண்டுவந்து இறக்கப்படுபவர்களை ‘அகதிகள்’என்றே விளிக்கிறார்கள். எழுதுவதன் வசதி கருதி நானும் அவ்விதமே வலியோடு அழைக்கவேண்டியிருக்கிறது.

வவுனியாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் தற்காலிக அகதி முகாம்களாக்கப்பட்டுவிட்டன. வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், காமினி சிங்கள மகாவித்தியாலயம், நெளுக்குளம் மகாவித்தியாலயம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம், மெனிக் பாம் (முன்பு மாணிக்கம் வளவு), பம்பைமடுவில் பல்கலைக்கழகத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதி ஆகிய இடங்களில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு பதினொரு மணியளவில் வவுனியா பிரதான வீதியருகில் ஏதிலிகளாக கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்த மக்களை முகாமுக்குக்குக் கொண்டுசெல்வதன் முன் தான் பார்த்து நெஞ்சுருகிப் போனதாக நண்பர்களில் ஒருவர் சொன்னார். அவர்களில் சிலர் வீதியோரத்திலேயே படுத்துறங்கிக் கிடந்தார்கள் என்று சொல்லிவிட்டு, ‘எப்படியெல்லாம் வாழ்ந்த சனங்கள்’என்று கண்கலங்கிப் பெருமூச்செறிந்தார். தனது கண்களுக்கு முன்னால் சுமார் ஐம்பது பேர் உயிரிழந்து விழுந்து கிடக்க அவர்கள் மீது ஏறிக் கடந்து தப்பித்து வந்ததாகப் பெரியவர் ஒருவர் சொன்னார். உயிரோடும் ஞாபகங்களோடும் மட்டும் தப்பித்து வந்தவர்கள் இதுவரையில் முப்பதாயிரத்திலிருந்து முப்பத்தைந்தாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வவுனியா வைத்தியசாலையின் பிணவறையில் அடையாளந் தெரியாத பல சடலங்கள் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. வன்னியிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் வயிற்றுப்போக்கினாலும், காய்ச்சலினாலும் அவதிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ‘அவர்களைப் போய்ப் பார்க்கலாமா?’ என்று கேட்டபோது, அவ்வாறு போய்ப் பார்ப்பவர்கள் கண்காணிக்கப்படவும் கைதுசெய்யப்படவும் கூடுமென்று தெரிவிக்கப்பட்டது. நான்கு தடவைகள் அந்த நோயாளிகளைப் போய்ப் பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதிய கட்டில்கள் இல்லாத காரணத்தால் வெறுந்தரையிலும் நோயாளிகள் படுத்திருப்பதாகச் சொன்னார்கள். அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் சில அகதிகளுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்கள் வெளியிலிருப்பவர்களோடு தொடர்பாடக் கூடாதென்பதில் இராணுவத்தினர் மிகுந்த இறுக்கம் காட்டிவருகின்றனர். வவுனியாவில் இருக்கும் உறவினர்கள் யாராவது அகதிகளைப் போய்ப் பார்ப்பதாயின், பதினைந்தடிக்கும் தள்ளிநின்றே பார்க்க முடியும். பேசமுடியும். இடையில் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டிருக்கின்றன. பதினைந்தடி தள்ளி நிற்கும் உறவுகளோடு கத்திப் பேசும்போதுகூட பக்கத்தில் எப்போதும் யாராவது கண்காணித்தபடி இருக்கிறார்கள். மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி வந்தவர்கள், கடும் மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பவர்கள், வாழ்வின் சகிக்கமுடியாத குரூரப் பக்கத்தைக் காணும் துர்ப்பேறு பெற்றவர்கள் அதைத் தமது உறவுகளுடன் பகிர்ந்து ஆற்றிக்கொள்ள முடியாத நிலையில் கைதிகளைப்போல வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்னோடு பேசிய இளம் பெண்கள் இருவரின் பெற்றோரும் சகோதரர்களும் அகதி முகாமில் இருந்தார்கள். ஒரு பெண்மணியின் மகளும் குழந்தைகளும் அகதிகளாக வந்திருந்தார்கள். இன்னொரு பெண்ணின் மகளும் குழந்தைகளும் வவுனியா வந்துவிட, கணவர் வன்னிக்குள் சிக்கியிருக்கிறார். சிகிச்சைக்காக வவுனியாவுக்கு முற்கூட்டியே வர வாய்த்ததனால் அந்தப் பெண்மணி தப்பிவிட்டார். அவர் கணவரை நினைத்து எந்நேரமும் அழுதபடியே இருந்தார்.

முகாம்களுக்குள் சில சமயம் வெளியிலிருந்து உணவுப்பொதிகள் அனுமதிக்கப்படுகின்றன. சில சமயம் திருப்பியனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறைகளுக்குள்ளும் குழுக்களாகப் பிரித்துவிடப்பட்டிருப்பவர்களில் குறிப்பிடப்பட்ட ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பெரிய பாத்திரம் ஒன்றுடன் அனுப்புகிறார்கள். அவர் தனது அறையிலிருப்பவர்களுக்காக வரிசையில் நின்று தேநீர் வாங்கிவருவார். மதிய உணவு பெரும்பாலும் மூன்றரை மணிக்கு முன்னதாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

திரும்பி வரும்போது காமினி மகாவித்தியாலயத்தைக் கடந்து வரவேண்டியிருந்தது. பளபளக்கும் வெள்ளிக்கம்பிச் சுருள்கள் பாம்புகளாய் முகாமுக்கும் வீதிக்கும் இடையில் சுருண்டிருந்தன. உள்ளே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பதினைந்தடி தொலைவில் இருந்தபடி என்ன பேசுவது? “அம்மா! உங்களை நினைத்து நாங்கள் அழுதுகொண்டிருந்தோம்”என்ற வார்த்தைகளை, அத்தனை தொலைவில் இருந்தபடி எப்படிச் சொல்வது? “தங்கச்சீ! நீ சாப்பிட்டியா?”என்று உரத்த குரலில் எங்ஙனம் கத்திக் கேட்பது? “என்ரை பிள்ளை உயிரோடை இருக்கிறானா? அவனை நீங்கள் பாத்தீங்களா?”என்று ஒரு தாய் வன்னியிலிருந்து வந்திருப்பவர்களைப் பார்த்து அத்தனை கண்காணிப்பிற்கிடையில் எப்படிக் கதறியழுவாள்? மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன், தணிக்கைக்குட்படுத்தப்பட்ட வார்த்தைகளால் பேச விதிக்கப்பட்டவர்களாயினர் எமது மக்கள்.
=== ==== ====

காலை அப்படியொரு குளிராயிருக்கிறது. மதியம் அப்படியொரு அனலாய் எரிக்கிறது. புகையிரத நிலையத்திற்குச் செல்லும் வழியில் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட ‘செக்கிங்கா?’என்றேன். ‘இல்லை. தினமுரசு பேப்பர்’என்றாள் வழியனுப்ப வந்த தோழி. ‘வேண்டாம்’என்றேன். ‘இல்லை… வாங்க வேண்டும்’என்றாள். ‘பேப்பர் வாங்காவிட்டால் பிரச்சனை’என்றாள் ஆட்டோ நகரத்தொடங்க. புலிகளுக்கு எதிரான செய்திகளைத் தாங்கிவரும் தினமுரசை வாசிக்க அன்றேல் வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் மக்கள். ஆக, நாங்கள் பார்க்கும் தொலைக்காட்சிச் சானல், வாசிக்கும் பத்திரிகை தொடக்கம் வாழும் நாட்களின் எண்ணிக்கை வரையில் எதுவும் எங்கள் கைகளில் இல்லை. இன்ன நேரம்தான் மலங்கழிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டாலும் வியப்பதற்கொன்றுமில்லை. அகதி முகாம்களில் அதுவும் சாத்தியமே.

புகையிரத நிலையத்தில் பயணப்பொதிகளைக் கிண்டக் கொடுத்து நிற்கும்போது அந்தரங்கம் என்று இந்த நாட்டில் ஒன்றுமில்லை என்று எண்ணத்தோன்றியது. தங்கிய முகவரி, தங்கவிருக்கும் முகவரி, பயணத்தின் காரணம் எல்லாம் கேட்டறிந்து எழுதிக்கொண்டார்கள். எனது புகைப்படக் கருவியை நாயிடம் கொடுத்து ‘குண்டில்லை’என்று கண்டுபிடித்தார்கள். மிக நீண்டநேரம், நீண்ட வரிசையில் புகையிரத நிலையத்தில் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. குழந்தைகள் அழுதுகொண்டிருந்தார்கள். பெரியவர்கள் போர் நடந்துகொண்டிருக்கும் தேசத்திற்கேயுரிய பொதுப்பண்பாகிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

கொழும்பை நெருங்கும்போது புகையிரதம் தடக்கென்று நின்றது. நின்றது நின்றதுதான். மூன்று மணி நேரமாகியும் சண்டி மாடு போல படுத்தே கிடந்தது. யாருக்கும் காரணம் தெரியவில்லை. வேறொரு புகையிரதம் தண்டவாளம் மாறி வந்துவிட்ட காரணத்தால் தாமதம் என்ற தகவல் கிளம்பும் நேரத்தில் வந்துசேர்ந்தது. நல்லவேளை அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’கையில் இருந்தது. எத்தகைய வரண்ட மனநிலையில் இருப்பவர்களையும் குளிர்த்திவிடும் எழுத்துக்குச் சொந்தக்காரருக்கு நன்றி. அந்தக் கொதிநிலையிலும் நான் ஒரு புத்தகத்தில் குனிந்து என்பாட்டில் சிரித்துக்கொண்டிருப்பதை எவரும் கவனித்திருந்தால் ‘ஐயோ பாவம்’என்று (நன்றி தோழி) பரிதாபப்பட்டிருப்பார்கள். தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத தருணத்தில் நுட்பமான நகைச்சுவையொன்று-பயணத்தில் சடக்கெனத் தோன்றிப் பின்னகரும் நீர்நிலைபோல-இனிமையாகக் குறுக்கிடும்.

இனிய இசை, நல்ல புத்தகம், உண்மையான நண்பர்கள்… உலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், கையசைத்துப் பிரிந்துவிட முடியாமலிருப்பதற்கான பட்டியல் நீண்டது. அன்றேல் அவையெல்லாம் உயிராசைக்கு வலுச்சேர்க்கும் அழகான சப்பைக்கட்டுகள்.

=== ==== ====

மனம் களைத்திருக்கிறது. எதற்காகவும் போர் வேண்டாம் என்றே தோன்றுகிறது. ‘எல்லோர் குருதியும் சிவப்பு... எல்லோர் கண்ணீரும் உப்பு’என்ற வார்த்தைகளை அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். சாவுக்களை படிந்த, நம்பிக்கைகள் நமுத்துப்போன, குற்றஞ்சாட்டும் அந்த விழிகளைப் பார்க்கும்போது, ‘எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள்.’என்று கையுயர்த்தி இறைஞ்சி அழ மட்டுமே தோன்றுகிறது. நான் அனுபவிக்காத பசி, என்மேல் தெறிக்காத குருதி, எனக்கு நேராத உயிரிழப்பை எழுதுவதே ஒருவிதத்தில் குற்றந்தான். ஆயினும், அழுவதையும் இப்படியாக எழுதுவதையும் தவிர்த்து வேறென்னதான் செய்து கிழித்துவிட முடியும் எங்களைப் போன்றவர்களால்?


2.03.2009

முத்துக்குமார் மூட்டிய தீ: நின்றெரியுமா? அணைக்கப்படுமா?


பல்லாயிரக்கணக்கமான ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது முத்துக்குமாரையும் கொன்று தின்று ஏப்பம் விட்டிருக்கிறது அதிகார அரசியல். நேற்று முன்தினம் (31.01.09) மூலக்கொத்தடம் சுடுகாட்டில் அந்த உணர்வாளனின் உடல் எரியூட்டப்பட்டது.
முதல்நாள் நாங்கள் போனபோது, முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொளத்தூரின் அனைத்துக் கடைகளும் -‘டாஸ்மாக்’எனப்படும் மதுக்கடை தவிர்த்து- மூடப்பட்டிருந்தன. அரசால் நடத்தப்படும் சாராயக் கடைக்கு மட்டுமே அன்றைக்குத் துக்கவிலக்கு. முதலில் கண்ணில் பட்டவர்கள் கைகளில் குண்டாந்தடி ஏந்திய ஏராளமான பொலிசார்தான். காரை நேர்வழியில் அண்ணா சிலை வரை கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. எங்கெங்கோ சுற்றுவழி பிடித்து ஓரளவு அருகில் கொண்டு சென்று நிறுத்தியபோது இளம் பழுப்புநிற உடையணிந்த கலகம் அடக்கும் பொலிசார் இரும்புத் தொப்பிகளோடும் குண்டாந்தடிகளோடும் பிரசன்னமாகியிருந்தனர். கம்பி வலை யன்னல்களோடு கூடிய காவல் வண்டிகளும் தயார்நிலையில் இருந்தன. கூட்டத்திற்கு அருகில் செல்ல பொலிசார் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அரசியல் தலைவர்கள் வழக்கம்போல உணர்ச்சிவயப்பட்ட குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். சன இரைச்சலில் சரியாகக் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை.
மேடைக்குப் பின்புறம் இருந்த ஒரு இடத்தில் முத்துக்குமாரின் உடல் கண்ணாடிப் பேழைக்குள் அஞ்சலிக்கென வைக்கப்பட்டிருந்தது. பொசுங்கிக் கரிந்த அவ்வுடலை நெருங்கக் கூட்டம் விடவில்லை. தவிர, பார்ப்பவரைத் தன்னைத்தான் பார்க்கிறார் என்று நினைக்கத் தூண்டும் உள்ளத்தின் நேர்மை கண்களில் துலங்கும் அந்தப் புகைப்பட முகத்தை மட்டுமே நினைவிலிருத்த உள்ளுர விரும்பினேன். அருகிலிருந்த வீடொன்றின் மாடியில் ஏறியபோது அலைமோதும் கூட்டத்தைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இலக்கியக் கூட்டங்களிலும் ஏனைய அரசியல் கூட்டங்களிலும் போலன்றி குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் கலந்துகொண்டிருந்தார்கள். கைகளில் புகைப்பட மற்றும் வீடியோ கருவிகளுடன் பத்திரிகையாளர்கள் தகுந்த இடம்தேடி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். முத்துக்குமார் தனது உடலில் மூட்டிய அனல் எல்லோரது கண்களிலும் படர்ந்திருந்தது. ஒருகணம் இது வேறு தமிழகம்; இது வேறு இளைஞர்கள் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. தலைவர்கள் பேச்சில் தமக்கு உவப்பான இடம் வரும்போது கூட்டம் ஆரவாரித்தது; சிலசமயங்களில் அவர்களையே மறுத்துரைத்தது. ‘பேசு’என்றது. ‘பேசாதே’என்றது. வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் எத்தனையோ கூறியும் முத்துக்குமாரின் உடலை அன்றைக்கு தகனம் செய்ய எடுத்துப் போக விட மறுத்துவிட்டனர் இளைஞர்கள். ‘என்னுடைய உடலைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திப் போராடுங்கள்’என்ற முத்துக்குமாரின் உருக்கமான வேண்டுகோள் அவர்களுள் பதிந்திருந்தது. எதற்கும் கைதட்டும் கைகட்டும் தொண்டர்களாக இல்லாமல் முதல்முறையாக அந்த இளைஞர்கள் கட்டளையிடுபவர்களாகக் காணப்பட்டார்கள். எப்பேர்ப்பட்ட பெருந்தலையாக இருந்திருந்தாலும், அங்கே முத்துக்குமாருக்கு எதிராக ஒரு சொல் வீசப்பட்டிருந்தால் அவரைக் கீழே தள்ளி முத்துக்குமாருக்குப் பக்கத்திலேயே படுக்க வைத்துவிடுவார்கள் போலிருந்தது. தி.மு.க.வைச் சேர்ந்த பாபு அஞ்சலி செலுத்துவதற்காக பொலிசாருடன் முத்துக்குமார் கிடத்தப்பட்டிருந்த இடத்திற்குப் போனபோது கற்களும் சொற்களும் பறந்ததாகவும் அவர் அவசரமாக அஞ்சலித்துவிட்டு பதறியடித்துக்கொண்டு திரும்பியதாகவும் சொன்னார்கள். அந்த இடம் அத்தகு வெப்பக்காற்றை ஒருபோதும் அறிந்திராது.

‘வாழ்க’ ‘வாழ்க’என்று ஒலித்த கோசங்கள் இப்போது ‘ஒழிக’ ‘ஒழிக’ஆகவும் ‘எச்சரிக்கை’யாகவும் எழுந்தடங்கிக்கொண்டிருந்தன. மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டனவே அன்றி தமிழக அரசுக்கெதிராக ஒரு சொல்லைத்தானும் மறந்தும் உச்சரிக்காத ‘தெளிவு’வியக்கவைத்தது. ‘வீரவணக்கம் வீரவணக்கம்’ என திருமாவளவன் சொல்ல கூட்டம் எதிரொலித்ததானது பழைய நாட்களுக்குள் இழுத்தெறிந்தது. அங்கே பெருமளவில் திரண்டிருந்த ஈழத்தமிழர்களில் பலர் அதை உணர்ந்திருக்கக்கூடும்.

வைகோ அவர்களின் பேச்சைக் கேட்டபோது வருத்தமாக இருந்தது. ‘இவ்வாறாக கூட்டத்தைத் தன் பேச்சுவன்மையினால், கணீரென்ற குரலால் கட்டிப்போடக்கூடிய ஒருவர், ஈழத்தமிழர்கள்பால் எப்போதும் கருணையுள்ளத்தோடு இருக்கக்கூடிய ஒருவர் சமரசங்களால் தன்னிலையிலிருந்து சரிய நேர்ந்ததே…’ என்று எண்ணும்படியாக அவர் பேச்சு உணர்வுபூர்வாக எழுச்சியூட்டுவதாக இருந்தது. நரிக்கு வாலாக இருப்பதை விட பன்றிக்கு வாயாக இருப்பது நன்று என்பதும் பல இடங்களில் பொருந்தத்தான் செய்கிறது.

நாங்கள் திரும்பிச் செல்லவேண்டிய தொலைவின் உறுத்தலால், இருளடர ஆரம்பித்ததும் அங்கிருந்து கிளம்பவேண்டியதாயிற்று.மறுநாள் போவதாக எண்ணமிருக்கவில்லை. ஆனால், வீட்டில் இருப்பது குற்றவுணர்வைத் தந்தது. பிற்பகல் 3.15அளவில் நாங்கள் அவ்விடத்தைச் சென்றடைந்தபோது கூட்டம் கொதிநிலையில் இருந்தது. முதல் நாளைக்காட்டிலும் அதிகமான பொலிஸ்காரர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் சென்ற சில நிமிடங்களிலேயே முத்துக்குமாரின் உடல் ஊர்தியில் ஏற்றப்பட்டது. ஒரு வீட்டின் மாடியிலிருந்து கண்களில் நெருப்புடன் அலைமோதும் கூட்டத்தைப் பார்க்கமுடிந்தது. உடலைத் தாங்கிய ஊர்தியில் ஏற முண்டியடித்தது கூட்டம். அப்படி ஏறியவர்களை இயக்குநர் அமீர் கீழே இறங்கும்படியும் இல்லையெனில் வண்டியில் அமரும்படியும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். மெதுவாக மிக மெதுவாக ஊர்தி கிளம்பவும் நாங்களும் கீழே இறங்கி ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். கோபத்துடன், ஆற்றாமையுடன், கண்ணீருடன் புழுதி கிளப்பி நகரவாரம்பித்தது ஊர்வலம். காலகாலமாக நாங்கள் இப்படித்தான் நடந்தோம்; நடந்துகொண்டிருக்கிறோம்; இனியும் நடக்கவேண்டியிருக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

‘காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!’என்று எழுதிவைத்துவிட்டுப் போனான் முத்துக்குமார். அறிக்கை அம்பு விடுவதல்லால் வேறொன்றும் செய்யத் திராணியற்றவர்களின் மீது அவனது சொல்லம்பு பாய்ந்திருக்கிறது. நல்லவேளையாக முத்துக்குமார் செத்துப்போனான் என்று ஒரு கட்டத்தில் நினைக்கத்தோன்றியது. இல்லையெனில், உண்மைகளைப் புட்டுப்புட்டு எழுதிவைத்த கடிதத்திற்காகக் காலங்கடந்தேனும் கொலைசெய்யப்பட்டிருப்பான். அறிக்கைகளும், கடையடைப்புகளும் உண்ணாநிலைப் போராட்டங்களும் மனிதச் சங்கிலிக் கைகோர்ப்புகளும் செய்யத் தவறியதை சாதாரண இளைஞன் ஒருவன் தனது உயிர்க்கொடையால் செய்துகாட்டியிருக்கிறான் என்பதுதான் இன்றைய சுடுசெய்தி. அரசியல் கயமையாளரை இன்று சுட்டுக்கொண்டிருக்கும் செய்தி. உறங்குவதாய் பாசாங்கு செய்துகொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பமுடியாதென்று அறிந்து தன்னையே சுட்டு எழுப்பியிருக்கிறான் முத்துக்குமார். தனது மரணத்தை எப்படியெல்லாம் திரிபுபடுத்துவார்கள் என்பதை அறிந்து அவன் எழுதிவைத்த வாக்குமூலம் ஆவணப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

இல்லையெனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது கண்கூடு. ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று கேட்டு, பள்ளப்பட்டி என்ற இடத்தில் தீக்குளித்த ரவிக்கு நேர்ந்த கதிதான் முத்துக்குமாருக்கும் நிகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘ஸ்டவ்’வெடித்ததில் தீப்பிடித்தது என்றும், குடும்பச் சண்டையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்டார் என்றும் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது அவரது செயல். “எங்க வீட்டுல ஸ்டவு கிடையாது. சிலிண்டரு கிடையாது. காடா விளக்கு சிம்னி விளக்குதான் வைத்திருக்கிறோம்”என்று ரவியின் மனைவி சொல்லியிருக்கிறார். இல்லாத ஸ்டவ் வெடிக்கும் விசித்திரத்தை நாம் வேறெங்கிலும் பார்த்திருக்கமுடியாது.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, 100 அடி உயர செல்பேசி கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் கடலூரைச் சேர்ந்த நீதிவளவன் என்ற இளைஞர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் இடுப்பெலும்பும் கையெலும்பும் முறிவடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். ‘ஈழம் வெல்லும்; அதைக் காலம் சொல்லும்’என்று நல்லவேளையாக அவரும் எழுதிவைத்துவிட்டுத்தான் அந்த முயற்சியில் இறங்கிருக்கிறார். அதிகாரங்களின் மீது அவ்வளவு நம்பிக்கை! இலங்கையில் போர்நிறுத்தத்தை வேண்டி, சென்ட்ரல் புகையிரத நிலையம் முன்பாகத் தீக்குளிப்பதற்கு முயன்ற, சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, திருநெல்வேலியிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் முன்னால் தீக்குளிக்க முயன்ற நடராஜன் என்ற ஜோதிடரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ‘தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டது மற்றும் தற்கொலைக்கு முயன்றது’போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை காலவரையறையற்று மூடும்படியாக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடாலடியான அறிவிப்பும் வெளியேற்றமும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைத் திகைப்பிலாழ்த்தியிருக்கிறது. மாணவர்களின் கிளர்ச்சியைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடு என்று சொல்லப்படுகிறது. எதிர்வரும் 4ஆம் திகதியன்று பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி அனைத்து மக்களுக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருக்கும் இவ்வேளையில், ‘உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி தற்போது முழு அடைப்பு நடத்துவதென்பது சட்டத்துக்குப் புறம்பான செயல்’ என்றும் - ‘எங்கும், யாரும் முழு அடைப்பு நடத்தக் கூடாது’என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மீறிச் செயற்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறெனில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசு விரும்பவில்லையா? ஈழச்சிக்கல் தொடர்பாக தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்று காத்திருந்தது கனியும் நேரத்தில் தமிழக அரசு பின்னடிப்பது ஏன்? மாணவர்கள் என்ற மகத்தான சக்தி வெறும் புத்தகப் பூச்சிகளாக இல்லாமல் சமூகப் பொறுப்புணர்வோடு அநீதிக்கெதிராகக் களமிறங்குவதானது அதிகாரத்தின் மனச்சாட்சியை எந்தவகையில் தொந்தரவு செய்கிறது? ‘இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்’என்று விடுத்த வேண்டுகோள்களில் ஒருதுளியும் உண்மை இல்லையா? சிந்திய கண்ணீர் ஒப்புக்குப் பாடிய ஒப்பாரிதானா?

ஆக, முன்பொரு தடவை கூறியதுபோல அரசுகள் எல்லாம் சம்பந்தக்குடிகள்@ ஒரே துருப்புச் சீட்டான வாக்குச்சீட்டை பணபலம் மற்றும் அடியாள் பலத்தின் முன் இழக்கச் சம்மதிக்கும் மக்கள் பூச்சியத்திற்குச் சமானம்.

இன்று தமிழகத்தில் மூண்டிருக்கும் நெருப்பு முத்துக்குமார் என்ற இனமானமுள்ள, அறிவார்த்தமான இளைஞன் பற்றவைத்தது. அது எவ்விதம் சாத்தியமாயிற்று? கட்சியின் குரலால் அவன் பேசவில்லை; நாற்காலியின் நாக்கால் உரைக்கவில்லை; எலும்புத் துண்டுகளை எறிபவர்களை அவன் மிகச்சரியாக இனங்கண்டிருந்தான். சில கடல் மைல் தொலைவே உள்ள ஈழம் பற்றியெரிந்துகொண்டிருக்கையில் இன்னமும் படுக்கையறைக் கதைகளையும், இணையத்தில் கொஞ்சியதையும், சிந்துபாத் பயணங்களையும், ‘கல்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’என்ற பெருங்காயம் வைத்த பாண்டக் கதைகளையும் எழுதி ‘ஊமைச் செந்நாய்’கள் போல இராமல் உண்மையைத் தன் எழுதுகோலில் ஊற்றி எழுதினான். ஈழச்சிக்கல் தொடர்பாக கள்ள மௌனம் சாதிப்பவர்களின் எழுத்துக்களை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். இங்கே பிரபலமாக எழுதிக்கொண்டிருக்கிற சில ‘பெருந்தலை’கள் சாதிக்கும் கள்ள மௌனத்திற்கும் அபத்தார்த்தம் பொருந்திய ‘ஐயகோ என்னினம் அழிகிறதே’க்களுக்கும் பெரிய வித்தியாசங்களில்லை.
எழுத்து என்பது, சக மனிதனுக்கு அநீதி நேரும்போது ஆயுதமாகவேண்டும். அவள்-அவன் அழும்போது கைக்குட்டையாகவேண்டும். முத்துக்குமாரின் கண்ணீரில் சூடு இருந்தது. அது இடையில் கிடக்கும் கடல்போல உப்புக் கரித்தது. அவன் மூட்டிய தீயை அணைத்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். அதிகாரத்திற்கும் மக்களின் மனச்சாட்சிக்குமான கயிறிழுத்தல் ஆரம்பமாகிவிட்டது.

முத்துக்குமார் மூட்டிய தீ அணைய இடங்கொடுப்பதும், மூண்டெரியத் தூண்டுவதும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது.தாதாக்களைத் தேவதூதர்களாக நம்பியிருந்த காலங்கள் கழிந்துகொண்டிருக்கின்றன எனச் சும்மாவானும் நம்ப ஆசையாய்த்தானிருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிக் கனவு காணவேண்டுமென்கிறார்கள். என்ன செய்வது? தொடர்ந்து துர்க்கனவாகத்தான் வந்துகொண்டிருக்கிறது.

நன்றி: கீற்று.காம்