1.21.2009

புலிகளின் பின்னகர்வு: விடை தெரியாத கேள்விகள்


நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் “பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே.... வேதனையாக இருக்கிறது”என்று சொன்னார். எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது… தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதா அல்லது இலங்கையே வைத்துக்கொள்வதா என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. குரங்கு அப்பம் பிரிக்கிற கதை காரணமில்லாமலே ஞாபகத்திற்கு வருகிறது. சடுதியான மறதியில் வீழ்ந்து மக்கள்தான் வாக்களித்துத் தொலைக்கிறார்கள் என்றால், அரசியல்வாதிகள் அவர்களுக்குமேல் வரலாற்று மறதி நோயால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ‘பிரபாகரனைப் பிடிப்பது’என்ற விடயத்தை ஏதோ பட்டாம்பூச்சியைப் பிடிப்பதுபோல மெத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைதிப் படையாக இலங்கையில் காலடி வைத்த இந்திய இராணுவம் அழிவுப்படையாக மாறி பேரனர்த்தங்களை விளைவித்தபோது, பிரபாகரன் அவர்களும் ஏனைய போராளிகளும் காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது நாமெல்லோரும் அறிந்ததே. போராளிகளை மரணம் நிழலெனத் தொடர்ந்த காலமது. அந்நாட்களில் பிரபாகரன் அவர்களது மெய்க்காவலர்களில் இருவர் கைகளில்‘பெற்றோல்’குடுவைகளுடன் எப்போதும் தயார்நிலையில் இருந்தார்கள். காரணம், “நான் குண்டடிபட்டோ வேறெவ்வகையிலோ இறந்துபோக நேர்ந்தால் எனது உடல்கூட அவர்களது கைகளில் சிக்கக்கூடாது. நீங்கள் தற்கொலை செய்துகொள்வதாயின் எனது உடலைக் கொழுத்திய பின்னரே செய்துகொள்ளவேண்டும்”என்று அந்த இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுக்கும் அவர் பணித்திருந்தார். உயிரற்ற தனது உடல்கூட கைப்பற்றப்படக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தவரா உயிரோடு பிடிபடுவார்? ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தினை நசுக்குவதில் காட்டும் மும்முரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை நினைவுகொள்வதிலும் காட்டினால் நன்று.

“எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சமரசத்திற்குட்படாத, விலைபோகாத ஒருவரின் வழிநடத்தலில் இயங்கி, உலகத்திலுள்ள போராளி அமைப்புகளில் போர்த் தந்திரோபாயத்திலும் அர்ப்பணிப்பிலும் சுயகட்டுப்பாட்டிலும் தீரத்திலும் முதன்மையானது என்று எதிரிகளையே வியப்படைய வைத்தவர்களுமான விடுதலைப் புலிகள் தமிழர் தாயகப் பிரதேசங்களை ஒவ்வொன்றாக எதிரிகளின் கைகளுக்கு விட்டுக்கொடுத்துப் பின்னகர்ந்து செல்வது எதனால்?”என்பதுதான் இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாகும்.

உலகின் நான்காவது பலமான இராணுவம் என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் ‘இனி முடியாது’ என்று திரும்பிச் சென்றதை நாமறிவோம். 1,80,000 வரையிலான எண்ணிக்கையுடைய இராணுவ பலத்தை (இந்தியா போன்றவர்களின் படையுதவிகள் தவிர்த்து) தன்னகத்தே கொண்டதும், பாதுகாப்புச் செலவினமாக ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி ரூபாவை வாரியிறைத்து வருவதுமான இலங்கை அரசுக்கு இருபத்தைந்தாண்டு காலமாக கண்மூடினால் புலிச்சொப்பனமாக (இது சிம்மசொப்பனமல்ல) விடுதலைப் புலிகள் இருந்துவருவதை நாமறிவோம். 1995ஆம் ஆண்டு ரிவிரச எனப் பெயர் சூட்டப்பட்ட பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையின் விளைவாக இலட்சக் கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக பெயர்ந்து வன்னி நோக்கி நகர்ந்துபோன பேரவலம் நிகழ்ந்தது. அப்போது முல்லைத்தீவில், பூநகரியில், ஆனையிறவில் பலம்வாய்ந்த இராணுவ முகாம்கள் இருந்தன. ‘அசைக்க முடியாது’ (டி.சிவராம் அவர்களின் வார்த்தைகளில்)என்று அமெரிக்காக்காரனே வந்து பார்த்து தரச்சான்றிதழ் வழங்கிவிட்டுப் போன ஆனையிறவையே புலிகளால் அசைக்க முடிந்தது. முல்லைத்தீவு, பூநகரி இராணுவ முகாம்களும் புலிகளிடம் வீழ்ந்தன. இவ்வாறாக வெல்லுதற்கரியவர்கள் என்று பெயர்பெற்ற விடுதலைப் புலிகள் மாங்குளம், மல்லாவி, கிளிநொச்சி, முகமாலை என்று தொடர்ச்சியாக விட்டுக்கொடுத்தபடி பின்னகர்ந்து செல்லும் மாயந்தான் என்ன?

தொடர்ச்சியான போரினால் விடுதலைப் புலிகள் சோர்வடைந்து பலமிழந்து போனார்கள் என்பதை நம்பமுடியாதிருக்கிறது. ‘கிளிநொச்சி வீழ்ந்தது’ என்ற செய்தி சாதாரணர்களையே சாய்த்திருக்கிறது. அந்நகரை மையமாகக் கொண்டியங்கிய புலிப்போராளிகளுக்கு அது தாய்மடி போல. அதை விட்டுக்கொடுத்து நகரும்போது உலைக்களம் போல அவர்களது நெஞ்சம் கோபத்தில் கொதித்திருக்குமேயன்றி, ஓடித் தப்பினால் போதுமென ஒருபோதும் அவர்கள் கருதியிருக்கமாட்டார்கள். கரும்புலிகள் என்று தனியாக சிறப்புப் படையொன்று இருக்கின்றபோதிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள அனைத்துப் போராளிகளும் எந்நேரமும் தம்முயிரைத் தற்கொடை செய்யத் தயாரான கரும்புலிகள்தாம். கழுத்தில் சயனைட் குப்பி வடிவில் சர்வசதாகாலமும் மரணத்தைச் சுமந்து திரிகின்றவர்கள்தாம். அசாத்திய மனோபலமுடைய அதிமானுடர்களாக அறிந்தவர்களால் வியக்கப்படுகிற அவர்களால் இம்முறை மட்டும் தாக்குப்பிடிக்க முடியாமற் போனதென்பது வியந்துமாளாத ஒன்றாக இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரலாறு தன் எழுதுகோலோடு கவனித்துக்கொண்டிருக்கிறது. இழப்பின் துயர் செறிந்த தூங்காத விழிகளோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிக் களிப்பில் வெறியுமிழும் பேரினவாதத்தின் கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன.

பின்னகரப் பணித்த பிரபாகரன் அவர்களது மனதுள் என்னதான் இருக்கிறது? கடலுக்குள் குதிக்கப்போகிறார்; கைதாகப் போகிறார் இன்னபிற சிறுபிள்ளைத்தனமான பிதற்றல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அவரது வியூகத்தின் மையப்புள்ளிதான் என்ன?

போர் என்ற புதிர் இம்முறை அவிழ்க்கப்பட முடியாததாக இருக்கிறது. மௌனத்தின் அடர்த்தியானது கேள்விகளைத் தூண்டுகிறது. ஊகங்களை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.

எதிரியைத் தேடிப்போய் சண்டை பிடித்தது போதும்; அவனை நமது காலடியில் கொண்டுவந்து தலையில் மிதிப்பதுதான் தகும் என்ற தந்திரோபாயம்தான் உள்நகர்ந்து உள்நகர்ந்து சென்றதன் பின்னிருக்கும் காரணமா? குழலூதிச் செல்பவனைத் தொடர்ந்துபோய் தண்ணீருள் விழும் எலிகளாகிவிட்டனரா சிங்கள இராணுவத்தினர்? தென்னிலங்கையில் ஏதாவது தாக்குதல்கள் நடத்தவேண்டியிருந்தால் திசமகராம, கதிர்காமம் போன்ற காட்டுப்பகுதிகளுள் சென்று, பல நாட்கள் தங்கி, உளவு அறிந்து, அப்பகுதிகளில் வாழும் வேடுவர்களைத் துணைக்கழைத்து நீர்நிலைகள் அறிந்து, உணவு பெற்று…அரும்பாடுபடவேண்டும். தவிர, எவரேனும் காயப்பட்டால் தூக்கிவர இயலாது. முதலுதவி தவிர்த்து வேறெந்த சிகிச்சை வசதிகள் இரா. காடுகளில் வழி தடுமாறி அலையவும் நேரிடும். மாறாக போராளிகளுக்கு தமிழ்ப்பகுதிகளின் ஒவ்வொரு அங்குலமும் இங்கே கிணறு, இங்கே கடப்பு என்று கண்பாடம், கால்பாடம். இவ்வாறான நிலையில் ஏன் எதிரிகளின் கோட்டைக்குள் சென்று சென்று தாக்க வேண்டும்? போரைத் தமிழர்களின் எல்லைகளுள் நகர்த்திவிட்டால்…என்று நினைத்திருக்கலாம்.

இப்போது முன்னரங்க நிலைகளில் சண்டை போடுவது மட்டுந்தான் இலங்கை இராணுவத்தினரின் வேலையன்று; பிடித்த இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும். முழுப்படையினரையும் முன்னரங்கத்தில் குவிப்பதாயின் முதுகிலும் கண் இருந்தால்தான் சாத்தியம். ஆக, தக்கவைத்துக்கொள்வது, சண்டை பிடிப்பது என்ற இருவேறு திசைகளில் படையினரின் கவனம் சிதறுகிறது. தமிழர்களை ஒரு குறிப்பிட்ட சதுர கிலோ மீற்றரினுள் தள்ளியதன் மூலம் உச்சபட்ச இனவழிப்பைச் சாத்தியமாக்கியிருப்பதாகச் சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. ஆனால், மறுவளமாக, புலிகளது கண்காணிப்பை வேண்டும் சமராடுகளத்தின் எல்லைகள் சுருங்கியிருக்கின்றன. ஆனால், இலங்கை இராணுவத்தின் சமராடுகளம் விரிந்திருக்கிறது. ஒவ்வொரு அங்குலத்திலும் படையினரை நிறுத்திவைக்க வேண்டிய பதட்டத்தினுள் அவர்களைத் தள்ளியிருக்கிறது. இது விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.

விடுதலைப் போராட்டத்தை இனவெறி அரசிடம் காட்டிக்கொடுத்த கருணாவின் கைங்கரியத்தினால், அவர் சொல்லும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே இராணுவத்தினரால் முன்னேற முடிகிறது என்றொரு கதையும் உண்டு. ஆனால், அது முற்றுமுழுதான உண்மையன்று. இயக்கத்தின் ஓர்மத்தை அறிந்த கருணாவுக்கே புலிகளின் பின்னகர்வு வியப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நகர்வதுபோல் போக்குக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு தாக்குதலிலும் ஐம்பது அறுபது எனப் படையினரைப் பலிகொள்வதானது வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கும் பேரினவாதிகளின் கண்களில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு – விடுதலைப் புலிகள் படைபல ஆயுதபல ரீதியாக இத்தனை வளர்ச்சியுற்றிருக்காத ஒரு காலகட்டத்தில் பலாலி விமான நிலையத்தில் சென்று இறங்கிய இராணுவ விமானங்களைச் சுட்டுத் தரையிறக்கவும் தலைசுழலவும் வைக்க முடிந்திருந்தது. இப்போதோ ஒரு உலங்குவானூர்தியைக் கூட அவர்கள் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் இல்லை. பத்துத் தடவைகளுக்கு மேல் தென்னிலங்கையில் உயிர்மையங்களில் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் திரும்பிவந்த விடுதலைப் புலிகளின் விமானங்களால், இந்த இக்கட்டான சூழலில் எதிரிப்படையின் மேல் சென்று இறங்கமுடியாதிருப்பது எதனால்? புலிகளின் ஆறு விமான ஓடுபாதைகளைப் பிடித்துவிட்டோம் என்று முழங்கும் அரச பீரங்கி, அந்த ஓடுபாதைகளில் ஓடிய விமானங்கள் எங்கு போயின என்பதைப் பற்றிக் கள்ளமௌனம் சாதிக்கிறது. (விமான ஓடுபாதைகளில் விடுதலைப் புலிகள் மோட்டார் வண்டிகளைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தார்கள் என்று கோத்தபாய ராஜபக்ஷ என்ற கோயபல்ஸ் சொன்னாலும் வியப்பதற்கில்லை.) அப்படியானால், விமானங்கள் எந்தவொரு கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன?
மீண்டும் அந்த மில்லியன் டொலர் கேள்விக்குத் திரும்புகிறோம். ‘எப்படிப் பின்னடைந்தார்கள்?’என்ற கேள்வி பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிகளையும் அறிந்த பலருள்ளும் விடையற்று அலைந்துகொண்டிருக்கிறது. உலகெங்கிலும் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கும்; தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இந்தக் கேள்வியை ஒருவர் கண்களில் மற்றவர் காண்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் போராளிகள் நின்றிருந்தார்கள் எனில், பொருளாதார மற்றும் பின்பலமாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், விடுதலையைத் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மலினப்படுத்தாத தமிழகத்தைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணத்தகுந்த சில அரசியல்வாதிகளும், இனப்பற்றாளர்களும், மத்திய அரசுக்குக் கட்டுண்டு இன்று கையறு நிலையில் கவலையோடிருக்கும் ஆறரைக் கோடி தமிழர்களுந்தான் இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஆதாரமாக பின்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

நேற்று கனடாவிலிருந்து தொலைபேசிய ஒரு நண்பர் சொன்னார் “நாங்கள் இடிந்துபோயிருக்கிறோம். சரியாக உறங்கி நீண்ட நாட்களாகின்றன. ஒரு மகத்தான, எதிர்பாராத திருப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்”

“எனது எண்பத்து நான்கு வயதான தாயார் சரியாகச் சாப்பிடுவதோ உறங்குவதோ இல்லை… எங்கள் பிள்ளைகள் தோற்றுப்போனார்களா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறார்” என்றார் மற்றொருவர்.

“பிரபாகரன் திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்தியா நிலைமைகள் தெரிந்தபின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்”என்று அண்மையில் இணையத்தளச் செவ்வியொன்றில் இந்தியப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் சொல்வதற்கிணங்க தகுந்த தருணத்திற்காக பிரபாகரன் காத்திருக்கிறாரா? உலக வல்லரசுகளில் முதன்மையானதும், சகல நாடுகளையும் அதட்டி உருட்டி அவற்றின் தலைவிதியை நிர்ணயிப்பதுமான அமெரிக்காவில், அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒபாமா, இருபது இலட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்றார். ‘அடிவாங்கியவனுக்கே வலி தெரியும்’என்ற கூற்றினை பிரபாகரன் அவர்கள் சிந்தித்திருக்கக்கூடும். ‘அடித்துப் பிடிக்க எங்களால் முடியும்; அங்கீகாரம் வேண்டும்’என்பது அவரது இன்றைய நிலைப்பாடாக இருக்கலாம்.

ஊகங்களும், கேள்விகளும், ஆதங்கமும், ஆற்றாமையும், துயரமும் சூழ்ந்திருக்கும் இக்கொடுங்காலத்தை ஒரு இமைத்திறப்பில் கடந்து மகிழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நிச்சயமாக அது நடக்கும் என்றே உள்ளுணர்வு கூறுகிறது. இறந்தகாலத்தின் அற்புதங்கள் ‘கலங்காதீர்’என்று கண்துடைக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், உக்ரேன் என இலங்கையின் இனவழிப்புப் போருக்கு முண்டுகொடுக்க, தாங்கிப்பிடிக்க, தட்டிக்கொடுக்க பல நாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அதனைக் காட்டிலும் அதிகமான நாடுகளில் (ஜேர்மனி, கனடா, இலண்டன், இந்தியா, சுவிஸ், நோர்வே, அமெரிக்கா…) ‘டயஸ்போரா’க்களாய் நாங்கள் இருக்கிறோம். எங்களோடு சத்தியம் இருக்கிறது. ‘வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.


1.10.2009

தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை'



வெளியீடு: காலச்சுவடு

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு போராட்டத்தின் வழியாக தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதன் முன் எண்ணுக்கணக்கற்ற இழப்புகளையும் மனச்சிதைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டியலிடாமலே அந்த மானுட அவலங்களை நாம் அறிவோம். சகமனிதர்களின் குறிப்பாக தான் வாழும் சமூகத்தின் இழப்புகளும் வலிகளும் ஒருத்தியை அன்றேல் ஒருவனைப் பாதிக்கவில்லையெனில், அவர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவர்.

சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக தீபச்செல்வனை அடையாளம் காணமுடிகிறது. அதேசமயம் போர் அவர் மீதே செலுத்தும் ஆதிக்கம், அழுத்தங்கள், நேரடியானதும் மறைமுகமானதுமான அச்சுறுத்தல்கள் இவைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். புனைவுகளும் இறந்தகாலத்தின் நினைவுகளும் பெரும்பாலும் கவிதைகளாகக் கருக்கொள்ளும் நிலையிலிருந்து மாறுபட்டு சமகாலத்தை இவரது எழுத்துக்கள் ஏந்திவருகின்றன. தான் வாழும் நிலத்தின் வதைபடலை கையறு நிலையோடு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் குற்றவுணர்வை இவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. போருள் வாழ்வதென்பது ஏறக்குறைய மரணத்திற்குச் சமானம். அந்த மரணவாதையை, அதன் குரூரத்தை அதனுள் வாழ்பவர்களால் மட்டுமே முழுமைபடப் பேசமுடியும்.

ஒரு தோழியின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட தீபச்செல்வனின் வலைப்பூவானது இணையத்தில் கிடைக்கப்பெறும் செய்திகளைக் காட்டிலும் வருத்தந் தருவதாயிருக்கிறது. அதுவே இலக்கியத்தின் சக்தியும் அல்லவா? அதிகாரங்களுக்கெதிராக எழுப்பப்படும் எந்தவொரு குரலையும் எழுத்தையும் நசுக்குவதும்கூட ஆக்கிரமிப்பாளர்களின் போர் தர்மங்களில் ஒன்றாக இருக்கும் நாட்டில், அழிவின் மையப்புள்ளியாக்கப்பட்டுவிட்ட கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டு இவ்வாறு எழுதத் துணிவதென்பது ஒரு கவி மனசுக்கே சாத்தியம். இத்தனை இளம் வயதில் அவர் தனக்கேயான கவிதை வடிவத்தைக் கண்டடைந்திருப்பதும் மற்றுமோர் சிறப்பு. முதல் தொகுப்பு என்பது பெரும்பாலும் கவிதை எழுதிப் பழகும் ஒரு முயற்சியின் வெளிப்பாடே என்ற எனது கருத்தை இவரது கவிதைகளை வாசித்தபிறகு மாற்றிக்கொண்டேன்.

உதிரிகளாக வாசிக்கும்போது ஏற்படாத தாக்கத்தை ஒரு தொகுப்பாக வாசிக்கும்போது கவிதைகள் தந்துவிடுகின்றன. அந்த வகையில் அவருடைய 30 கவிதைகளைத் தொகுத்து 'பகுங்குகுழியில் பிறந்த குழந்தை'என்ற தலைப்புடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத் திருவிழாவில், கவிஞர் சுகுமாரன் அவர்களது தலைமையில் 12ஆம் திகதியன்று தீபச்செல்வனின் தொகுப்பு வெளியிடப்படவிருப்பதாக அறிகிறேன். இத்தொகுப்பின் வழியாக தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு மேலுமொரு கனதியான படைப்பாளி வந்துசேர்கிறார்.

தீபச்செல்வனால் அவரது வலைத்தளத்தில் அண்மையில் இடப்பட்டிருக்கும் 'கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்' என்ற கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல

"ஜனாதிபதியின் உணவுக் கோப்பையில்

மண் நிறைகிறது"

உண்மைதான். மற்றவர்களது மண் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் பசி தீராதது. ஆனாலும் மண்ணும் பசி கனலும் வயிறோடிருக்கிறது என்ற உண்மையை வரலாறு உணர்த்தத்தான் போகிறது. தமிழர்களின் மண் விதைகுழி மட்டுமன்று; ஆக்கிரமிப்பாளர்களது புதைகுழியும்கூட.


தீபச்செல்வனின் வலைப்பூ முகவரி: http://deebam.blogspot.com

புத்தகக் கண்காட்சி: புளகாங்கிதங்கள், புழுகுகள்


முன்னெப்போதிலும் முகம் பார்த்திராத, ஆனால் ஒத்த குணங்களால், ரசனைகளால் நெருக்கமான ஒரு நண்பரைப் பார்ப்பதற்கான நாளைக் குறித்து வைத்துவிட்டு அதனை எதிர்நோக்கிக் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? காதலன் அல்லது காதலி வருவதற்கு அரை மணிநேரம் முன்னதாகவே சந்திக்கும் இடத்திற்குப் போய், வீதியால் போகும் வரும் ஆட்களையெல்லாம் கண்களால் தொடர்ந்துகொண்டிருந்த நாட்கள் உங்களுக்கு வாய்த்திருக்கின்றனவா? நெடிய கோடையின் பின் வானம் இருட்டி இலைகள் அசைவற்றிருக்க முதல் மழைத்துளி மண்ணில் விழும்போது எழும் பரவசத்திற்கு இணையான இன்பத்தை அனுபவித்திருக்கிறீர்களா? தன் தாமரைக் கால்களை அசைத்து மல்லிகைக் கண்களை மலர்த்தி ரோஜா இதழ்களை அவிழ்த்துச் சொரியும் மழலையின் சிரிப்பை அள்ளிக் கண்களில் ஒற்றிக்கொண்டு நெகிழ்ந்திருக்கிறீர்களா? புத்தகக் கண்காட்சி நடக்கும் ஜனவரி மாதத்திற்கான காத்திருப்பும், அந்த ஜோதியில் இறங்கிக் கலக்கும் முதல்நாளும் மேற்குறிப்பிட்டவற்றுக்கு நிகரான பேரின்பத்தை எனக்கு அளிப்பவை.

நீட்டி வளர்த்துவானேன்…... கண்காட்சி தொடங்கிய முதல்நாள் அங்கு போயிருந்தேன். வீட்டிலிருந்து மூன்று பேர், மேலுமிரண்டு நண்பர்கள் சகிதம் புத்தகத் திருவிழாவில் தொலைந்தேன். சென்னையின் வாகன நெரிசலில் சிக்கி சிடுசிடுத்து போய்ச் சேரும்போது ஏழு மணியாகிவிட்டது. போகும் வழி நீள சனங்கள் நெரிபட, பெரிய பெரிய முகங்களைத் தாங்கிய பதாகைகள் பயமுறுத்த உள்ளே போன நாட்கள் போலில்லைத்தான். ஆரவாரங்கள் ஆரம்பித்திருக்கவில்லை. அரங்கின் முன்னதாக வெளியீட்டுவிழா, கலை நிகழ்ச்சிகள், பிரபலங்கள் பேச என்று போடப்பட்டிருந்த மேடையின் முன் பரவியிருந்த நாற்காலிகளில் அமர்ந்து சிலபேர் ‘கடலை’ போட்டுக்கொண்டிருந்தார்கள். ஓரத்தில் வித்தியாசமாய் மஞ்சள் நிறத்தில் முகம் தூக்கிக்கொண்டு அசப்பில் சொகுசுப் பேரூந்தின் சாயலில் இரத்த தான வண்டி நின்றிருந்தது. முதல் நாளுக்கேயுரிய நிதானத்துடன் இருந்தது புத்தகக் கண்காட்சி. அதுவே எங்களுக்கு வசதியாகவும் அமைந்தது. அவரசமில்லாமல் இடிபடாமல் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கவும் வாங்கவும் முடிந்தது. ஒரு வருட தூக்கம் முறித்து அப்போதுதான் எழுந்திருந்தது போலிருந்தன stallகள். சிலவற்றில் அப்போதுதான் அட்டைப் பெட்டிகளைப் பிரித்து, புத்தகங்களைச் சுற்றியிருந்த வெள்ளைக் காகிதங்கள் பரவியிருக்க நடுவே அமர்ந்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பதிப்பக நிலையங்களிலும் இரண்டு மூன்று பேர்களுக்கு மேல் இருக்கவில்லை.

புத்தகம் வாங்கவரும் பெண்களின் கண்களை வாசிக்கவே வருவதாக (சைட் அடிக்க) என்னோடு வந்த பையன்களில் ஒருவர் அறிவித்தபடியிருந்தார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளே அதற்கு உகந்ததென அவருக்குப் பரிந்துரைத்தேன். புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நேரத்திற்கு எங்ஙனமோ சிறகு முளைத்துவிடுகிறது. தென்திசையில் (கே.கே.புக்ஸ்) ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’கடல் நீலத்தில் கிடந்தது. இனம்புரிந்த வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தேன். இரண்டு வரிசைகளைக் கூடக் கடந்திருக்க மாட்டோம்.. மணி எட்டரையாகிவிட்டது.

மிகச் சரியாக எட்டரைக்கு சங்கூதியபடி… மன்னிக்கவும் விசிலூதியபடி காக்கி நிறத்தில் உடையணிந்தவர்கள் வந்தார்கள். நான் அப்போதுதான் உயிர்மையினுள் ஓடித் திரிந்துகொண்டிருந்தேன். நேரம் முடிவதற்கிடையில் காலச்சுவட்டுப் பக்கமும் கண்ணோட்டம் விட்டுவிடவேண்டுமென்ற திட்டத்தில் மண்விழுந்தது. (நீங்கள் நினைப்பது சரி. நான் பதிப்பக விடயத்தில்.........:).) தெய்வத் திருமுகங்களை மறைத்து மூடுவதுபோல ஸ்டால்களின் முன் மஞ்சள் திரைச்சீலைகளை இழுத்து இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள். இனி வேலைக்காவாது என்று வெளியில் வந்தோம். கவிஞரும் தோழியுமானவர் க்ரியா ராமகிருஷ்ணனைப் பார்த்துப் பார்த்து வியந்துகொண்டிருந்தார். ‘எத்தனை வருஷமா இவரைப் பாக்கணும் பாக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்’என்றார் என்னைக் கண்டதும். க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அவரது புத்தகங்களைப் போலவே நேர்த்தியான வடிவம்.

புத்தகங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்த என்னை ‘பிறகு வரலாந்தானே’என்று கைப்பிடியாய் இழுத்துப் பிடித்தாள் அண்ணாவின் மகள். இழுத்த இழுப்பில் ‘விட்டால் திரும்பவும் ஓடிப்போய்விட்டால் என்ன செய்வது’ என்ற பயம் தொனித்தது. ஓடிப்போகக்கூடிய ஆளுந்தான்!
கோப்பி குடிக்கலாமென்று உணவுச்சாலைக்குப் போனோம். இல்லையென்று அவர்கள் கைவிரித்தது குடிக்காத கோப்பியை விடக் கசந்தது. ஜூஸ் குடிக்கும் மனோநிலையோ காலநிலையோ இருக்கவில்லை.

கையில் கனத்தன புத்தகங்கள். நாளையும் போகலாம் என்றது பேராசை. புத்தகங்களினுள்ளிருந்து அழைத்துக்கொண்டேயிருக்கும் வரிகளுக்கு மயங்காமலிருப்பதாவது!

வழக்கமாக எனது பதிவுகளால் அழவைப்பவள் என்று நண்பர்களில் சிலர் கேலிசெய்வதுண்டு. வித்தியாசமாக, கொஞ்சம் பொறாமைப்பட வைத்தால் நீங்கள் கோபித்துக்கொள்ளப் போகிறீர்களா என்ன?

பு.கண்காட்சியில் முதல் நாளன்று (08-01-09) வாங்கிய புத்தகங்கள்
மீதமிருக்கும் சொற்கள் தொகுப்பு அ.வெண்ணிலா (பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
'சே வாழ்வும் புரட்சியும்'- குறுந்தட்டு
'லெனின்' குறுந்தட்டு
இலக்கிய மொக்கைகள் -வினவு
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் -சசி வாரியர்
ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் -5 புத்தகங்கள்
பாரதி -சரத் சந்திரர்
அக்னி மூலை -பா.செயப்பிரகாசம்
காளி நாடகம் -உண்ணி. ஆர் (தமிழில் சுகுமாரன்)
வார்ஸாவில் ஒரு கடவுள் -தமிழவன்
ஆஸாதி ஆஸாதி ஆஸாதி(கட்டுரைகள்) -சாரு நிவேதிதா
எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது -சாரு நிவேதிதா
காத்திருந்த வேளையில்… - மனுஷ்ய புத்திரன்
அடியாள் -ஜோதி நரசிம்மன்
அழையா விருந்தாளி -ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
உடைந்துபோன ஒருவன் -ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி
கள்ளம் -தஞ்சை பிரகாஷ்
பிர்சா முண்டா -கே.எஸ்.சிங்
நாடு கடத்தப்பட்டவனின் வரலாறு -உபேந்திரநாத்பந்த்யோபாத்தியாய்
யாழ்ப்பாண வைபவ மாலை -குல.சபாநாதன்
சமஷ்டியா தனிநாடா -மு.திருநாவுக்கரசு
மீளாத காதல் - மாக்ஸிம் கார்க்கி
நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன் -மாக்ஸிம்கார்க்கி
குல்சாரி - சிங்கிஸ் ஐத்மாத்தவ
தாய் - மாக்ஸிம் கார்க்கி
மலைகளைத் தவிர எமக்கு நண்பர்கள் இல்லை- குர்திஸ் கவிதைகள் - யமுனா ராஜேந்திரன்
பிணம் செய்யும் தேசம் -இளைய அப்துல்லாஹ்
மண் பூதம் -வா.மு.கோமு
வாத்து -சோலைக்கிளி
ஒவ்வொரு புல்லையும் -இன்குலாப் கவிதைகள்
சிறைக் கடிதங்கள் -ரோசா லக்சம்பேர்க் (தமிழில் கி.அ.சச்சிதானந்தம்)
லைப் இஸ் பியூட்டிஃபுல் -ராபர்ட்டோ பெனினி,வின்சென்சோ செராமி – தமிழில் யுகன்
சமயம் தொ.பரமசிவன், சுந்தர்காளி
அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்-சங்கர ராம சுப்பிரமணியன்
என் நண்பர் ஆத்மாநாம்- ஸ்டெல்லா புரூஸ்
சொற்களைத் தவிர வேறில்லை -எம்.ஜி.சுரேஷ்
உரையாடல்கள் -அசோகமித்திரன்
க.நா.சு. கவிதைகள்
இரு நீண்ட கவிதைகள்- நகுலன்
விருட்சம் கவிதைகள் தொகுதி 1
விருட்சம் கவிதைகள் தொகுதி 2
அசடு -காசியபன்

இவை தவிர 3ஆம் திகதியன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாங்கியது:
‘பேச்சரவம் கேட்டிலையோ'- தமிழச்சி தங்கபாண்டியன்(நேர்காணல் தொகுப்பு)
5ஆம் திகதியன்று இடம்பெற்ற வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாங்கியவை:
உலக சினிமா -எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (2005 வரையிலானவை)
அதே இரவு அதே வரிகள் -எஸ்.ராமகிருஷ்ணன்
நம் காலத்து நாவல்கள் -எஸ்.ராமகிருஷ்ணன்
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை -எஸ்.ராமகிருஷ்ணன்
காற்றில் யாரோ நடக்கிறார்கள் -எஸ்.ராமகிருஷ்ணன்
கோடுகள் இல்லாத வரைபடம் -எஸ்.ராமகிருஷ்ணன்
சித்திரங்களின் விசித்திரங்கள் எஸ்.ராமகிருஷ்ணன்

பார்க்கக் கிடைத்த பிரபலங்கள்: ஆழியூரான், அழகிய சிங்கர், குட்டி ரேவதி, க்ரியா ராமகிருஷ்ணன், நா.கதிர்வேலன், செல்வி. வீட்டிற்கு வந்து கண்ணாடியில்: தமிழ்நதி:)

இன்றைய பிரார்த்தனை: இத்தனையையும் வாசித்து முடிக்கும்வரை மரணம் என்னை அணுகாதிருக்கட்டும்.


1.06.2009

கிளிநொச்சி: இழந்துதான் போவோமோ…?


எல்லா தேவதைகளும் கைவிட்டுவிட்டனவோ என்ற ஆற்றாமையும் எதையேனும் பற்றிக்கொண்டு எழுந்துவிடவேண்டுமென்ற துடிப்பும் ஒருசேர இயங்கி குழப்பகரமான, இருண்ட மனோநிலைக்குள் தள்ளியிருக்கின்றன. ஆனையிறவும் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் வீழ்ந்துவிடும் என்று செய்திகள் கூவிக்கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தென்னிலங்கையின் வீதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி ‘கிளிநொச்சி வெற்றி’கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
வெற்றியின்போது (அவர்கள் கொள்ளும் பொருளின்படி) இருக்கவேண்டிய நிதானமும் பொறுப்புணர்வும் அற்று, அற்பத்தனமான அதிரடி அறிவிப்புகள், ஆர்ப்பாட்டங்கள், களியாட்டங்களில் கொழும்பு மூழ்கிக்கொண்டிருக்கிறது. எத்தனை தடவை கிளிநொச்சி கைமாறியிருக்கிறது என்ற வரலாற்றை மறந்து பித்துநிலையில் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘எதிரிகளிடமிருந்து கிளிநொச்சியை மீட்டுவிட்டோம்’என்று இராணுவ உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குச் செவ்வி வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்தனை துயரத்திற்கிடையிலும் ‘யாருடைய நிலத்தை யார் மீட்பது?’என்ற வெஞ்சினம் கலந்த சிரிப்பு பீறிடுகிறது. சொல்பவனின் கயமையில் வெகுள்கிறது நெஞ்சம். தென்னிலங்கையும் அவர்களது.. வடகிழக்கும் அவர்களதே! ஆக, 'தமிழர்கள் வந்தேறு குடிகள்’ என்று சந்திரிகா அம்மையார் வாய்மொழிந்தது உண்மையாகிறதல்லவா?

ஆண்டாண்டு காலமாக தமிழர்களுடையதாய் இருந்த பூர்வீக மண்ணை, தமிழெனும் அமிழ்து சொரிந்த நிலத்தை, வீரமும் அர்ப்பணிப்பும் நிறைந்த போராளிகள் உலவித் திரிந்த பூமியை, தமிழர்களின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட ஒரு மாதிரி நகரத்தை, நள்ளிரவிலும் பெண்கள் பயமற்று வீதிகளில் திரியக்கூடிய அளவிற்கு பாதுகாப்பு மிகுந்திருந்த ஒரு பகுதியை ‘எமதென்று’ஒருவன் உரைக்கக் கேட்பது கொடுமையிலும் கொடுமை! தற்காலிகமாக கிளிநொச்சியை இழந்ததிலும் வலி தருவதாக அவ்வார்த்தைகள் அமைந்திருந்தன.

இழப்பும் பின்னடைவும் சிந்திக்கும் திறனிலிருந்து உணர்ச்சியின் பாதாளத்திற்குள் நம்மைத் தள்ளிவிடுகின்றன. ஆம்…! நூங்கள் நம்பியிருந்தோம். இம்முறையும் இழக்கோம் என்று நம்பியிருந்ததற்கு விடுதலைப் புலிகளின் தீரம் மற்றும் நுட்பமான படைநகர்த்தல்கள் காரணமாக இருந்தன. இராஜதந்திரப் பின்வாங்கல்கள் தோல்விகள் ஆகாதென்று தெரிந்தபோதிலும் வலிக்கத்தான் செய்கிறது. களத்தில் நின்று உயிரைக் கொடுப்பவர்களுக்கும் காயப்பட்டுத் துடிப்பவர்களுக்குமில்லாத வலியா எங்களுக்கு? பட்டினியாலும் இழப்புகளாலும் இடப்பெயர்வுகளாலும் துரத்தப்பட்டு, 'ஓடுவது என்றைக்கு ஓயும்? இனி இடம்பெயர்ந்து செல்ல இடமில்லையே?'என்ற கேள்விகளுடன் குறுகியதொரு நிலப்பகுதிக்குள், வானத்திலிருந்து பொழியும் குண்டு மழைக்குள் ஏங்கிக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கில்லாத மனக்கிலேசமா எங்களுக்கு? எனினும், இருண்ட மனத்தோடு அந்த நாள் கழிந்தது. இழவு விழுந்த வீடு போல ஒரு வெறுமை கவிந்துவிட்டது. ஊடகங்களுக்கு நல்ல தீனி. ஓயாமல் உரைத்தபடியிருந்தன. தாய்மண்ணில் வேரை விட்டு உலகெங்கும் விழுதெறிந்த எல்லாத் தமிழர்களின் மனங்களும் அன்றைக்கு வலித்திருக்கும். ஒரு பயங்கரவாதக் குழுவென ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளைப் பின்னடையச் செய்ய எத்தனை வல்லரசு நாடுகளின் ஆயுத உதவிகள், பயிற்சி வழங்கல்கள், கடனுதவிகள், நேரடியான இராணுவப் பிரசன்னங்கள், தாங்கிப் பிடித்தல்கள், தட்டிக்கொடுப்புகள்!

‘நம்பிக்கையோடிரு மனமே நம்பிக்கையோடிரு’ தற்சமாதானங்களாலும் தாளமுடியாதபோது எங்களைக் கைவிட்டவர்களின்பால் கவனம் திரும்புகிறது. ஈற்றில் ஈழத்தமிழர்கள் எல்லா ஆட்சியாளர்களாலும் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள். ‘தொப்பூள் கொடி உறவு’என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொன்ன வார்த்தைகள் பொருளற்று காற்றில் அலைந்து திரிவதுபோல ஒரு பிரமை. அந்த வார்த்தைகளை ஆட்சியிலிருக்கிறவர்கள் பிரயோகிக்கக் கேட்கிறபோது ‘விதியே விதியே…’என்ற சலிப்பு மேலிடுகிறது. தொப்பூள் கொடிகளின் சலசலப்பு இந்திய மத்திய அரசில் மயிரளவு சலனத்தையும் விளைவிக்கவில்லை. இலங்கை எத்தனை தடவை கழுத்தில் ஏறி மிதித்தாலும் செல்லப்பிள்ளையின் பிஞ்சுப்பாதங்கள் நெஞ்சில் படும்போதெழும் குறுகுறுப்பாக எண்ணி மீண்டும் மீண்டும் அள்ளி அணைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்கிறது இந்திய அரசு.

எங்கள் குழந்தைகளின் உடலுள் ஓடிய குருதி தெருவில் ஓடியதை தொலைக்காட்சிகளிலும் குறுந்தட்டுக்கள் வழியாகவும் பார்த்தீர்கள். எங்கள் பெண்கள் வன்புணரப்பட்டு தொடைகளின் இடுக்குகளில் இரத்தம் வழியக் கிடந்த காட்சிகளையும் கண்டிருப்பீர்கள். உயிரும் உடலும் கொண்டுலாவியவர்கள் ஒரே குண்டில் சதைத்துணுக்குகளாகவும் குருதிச்சேறாகவும் மாறியதையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். எங்கள் தெருக்கள் நிறமழிந்து சாம்பல் மேடுகளாக மாறியதையும் நீங்கள் அறியமாட்டீர்களா? எல்லாம் அறிந்தும் எங்களை ஏன் கைவிட்டீர்கள்? இந்தியாவை எப்போதும் வம்புக்கிழுக்கும் பாகிஸ்தானை, அச்சுறுத்திக்கொண்டேயிருக்கும் சீனாவை, அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை நாங்கள் நம்பியிருக்கவில்லை. மொழியாலும் இனத்தாலும் பாரம்பரியத்தாலும் ஒன்றேயான இந்தியாவைத்தான் நம்பியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான பாடைகள் போனபிறகும் இன்னமும் நாற்காலிகள்தான் பிரதானமாயிருக்கின்றன என்பதை தமிழக அரசு நிரூபித்துக்கொண்டிருக்கிறது. தன்னைக் கடந்து போகும் ஒவ்வொருவரையும் பசியின் விழிகளால் நிமிர்ந்து பார்க்கும் ஒரு பாதையோரச் சிறுவனைப்போல, ஆர்ப்பாட்டமான அறிவித்தல்களின்போது நம்பிக்கையின் கீற்று எட்டிப்பார்க்கிறது. பாராமுகமாகக் கடந்துபோகும் பாதசாரிகளைக் கண்டு அச்சிறுவனின் விழிகளில் ஒளி அணைந்துபோவதைப் போல, அதிகாரத்துடனான தமிழக அரசின் சமரசங்களைப் பார்க்கும்போதில் நம்பிக்கையும் செத்துப்போகிறது. அதட்டிக் கேட்குமளவு அதிகாரமிருந்தும் மத்திய அரசின் முன் அடிபணிந்துகொண்டிருப்பதன் பொருள் புரியாத புதிரன்று. ‘கடந்த காலங்களில் செய்தோமே… செய்தோமே..’என்பது, இப்போது பசியோடிருக்கிறவனைப் பார்த்து ‘நேற்றைக்குச் சோறு போட்டேனல்லவா?’என்று விரட்டுவதற்கு ஒப்பாயிருக்கிறது. வார்த்தைகளால் கண்ணீரைத் துடைக்கமுடியும் என்பது சாதாரண பிரச்சனைகளுக்குச் சரியாக இருக்கலாம். மரணம் வீட்டுக்குள் வந்து விருந்தாளியாக உட்கார்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வார்த்தை முழக்கங்கள் எந்தவிதத்தில் உதவும்? ஒரு பருக்கையாகக்கூட அது பயன்படாது என்பதுதான் உண்மை. இசையை அருந்தி சாதகப் பறவை உயிர்வாழ்ந்திருக்கலாம்... வார்த்தைகளை உண்டு மனிதர்களால் உயிர்தரித்திருக்க முடியாதென்பதை அறியாதவர்களா நம்முடைய அரசியல்வாதிகள்?

கைவிடப்பட்ட, துரோகிக்கப்பட்ட மனோநிலையில் இறந்தகாலத்தின் அற்புதங்களில் சாய்ந்துகொள்கிறோம். சாத்தான்கள் சிலவேளைகளில் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கலாம்... அதனால் தேவதைகள் சபிக்கப்பட்டதாகப் பொருளில்லை. போர் வேறொரு கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. களம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான். மரபுப்போர் முறையிலிருந்து கெரில்லாப் போர்முறைக்கு விடுதலைப் போராட்டம் தள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால் வட கிழக்கில் மட்டும் நடந்துகொண்டிருந்த போரானது இப்போது தென்னிலங்கைக்கும் நகர்த்தப்பட்டிருக்கிறது. இனி நிழலைக் கண்டும் அஞ்சவேண்டிய துர்ப்பாக்கியத்துள் சிங்கள ஆட்சியாளர்கள் வாழவேண்டியதாக இருக்கும். சற்று மிகைப்படக் கூறின் மிதித்து நடக்கும் புல்லும் வெடிக்கும். ‘கட்டிலுக்குக் கீழும் கரும்புலி இருப்பான். கவனம்’என்றொரு கவிஞர் சொன்னது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. மறுவளமாக கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் ஒடுக்குமுறையின் குரூர முகத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதில் ஐயமில்லை. சுற்றிவளைப்புகளும் கைதுகளும் சித்திரவதைகளும் ஆட்கடத்தல்களும் முன்பைக் காட்டிலும் தீவிரமடையும்.

கிளிநொச்சியைப் போன்று இன்னும் இன்னும் தற்காலிக பின்னடைவுகள் நீடிக்கலாம். இருப்பினும் உயிரிழப்புகளைத் தவிர்த்து பின்னோக்கி நகர்ந்ததன் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை ‘அவரன்றி’ யாரறிவார்? இத்தனை முட்டுக்கொடுப்புகளோடு முட்டிமோதி ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியினுள்ளேயே ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் காவுகொடுத்து ஒரு சூனியப் பகுதியை வென்ற கோழைத்தனத்திற்குப் பதிலடி கிடைக்கும் வரையில் ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கட்டும்.

கவிஞர் பா.அகிலனின் கவிதை வரிகள் இவ்விடத்தில் ஞாபகத்தில் வருகின்றன.

ஆனால்,
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை,
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்களின் தொன்மச் சுடர்கள் மோனத்திருப்பதை
நீயும் அறியாது விடின்
இன்றறிக.
‘ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்’
ஓர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.

பா.அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’கவிதைத் தொகுப்பிலிருந்து…(குருத்து வெளியீடு)