7.12.2008

மீள்திரும்புதலும் ஒரு வாக்குமூலமும்


நந்திதா:முன்னொருபோதும் காணாத மழையா?

நந்திதா 1:ஒரே மழை எத்தனை விதமாய் பெய்கிறது!

நந்திதா:மனசின் கருவி கண். காட்சி பொறுப்பன்று.

நந்திதா 1:நெட்டுக்குத்தாகப் பெய்திருக்க வேண்டிய மழை, காற்றின் அதிகாரத்தின் முன் தோற்றுப்போய் சாய்ந்தடிக்கிறது. சில கலைஞர்கள் நினைவில் வருகிறார்கள். நிலத்தில் குமிழியிடும் மழையின் எத்தனத்தைக் காலால் தள்ளிக் கலைக்கிறது காற்று. அதனுள்ளும் இருக்குமோ வன்முறை?

நந்திதா:வன்முறை எவருள் இல்லை?

இத்தனை மழை பொழிகிறது. வெள்ளம் எங்கே போயிற்று? அங்கெனில் சாக்கடைகள் நிரம்பி வழியும். மலத்துணுக்குகள் மிதக்கும். முழங்கால் உயரத்திற்கு தண்ணீர்க்காடு பரவிவிடும். சாலையோரம் வாழ் மனிதர்கள் அன்றைய தூக்கத்தை தண்ணீருக்குக் கொடுத்துவிட்டு முழங்காலில் தலைவைத்து எங்கேனும் குந்தியிருப்பர். மீன்குஞ்சுகள் தத்தளித்து தறிகெட்டலையும்.

நந்திதா 1:நீ ஆரம்பிக்கிறாய்.

நந்திதா: ஒப்பீட்டின் குரல் ஓயாது.

நந்திதா 1:தெரிவுகள் இல்லையேல் ஒப்பீடில்லை. உள்ளது ஒன்றெனில் திருப்தி.

நந்திதா:என்னை நான் பரிகசித்துக்கொள்வதுண்டு‘ஜீன்ஸ் அணிந்த குறத்தி’என்று.

நந்திதா 1:அதன் வழி நீ உன்னை நாகரிகமானவள் என்று உயர்த்திச்சொல்கிறாயா? ஒரு இனக்குழுமத்தை எதற்காக இங்கிழுக்கிறாய்? கவிதையில் எழுதியதற்கே நண்பர் குறைப்பட்டார்.

நந்திதா:இல்லை. ஓரிடத்தில் தரிக்கவியலாத மனோநிலையை அல்லது வாழ்முறையை, சொல்லிப் பழகிப்போன சொற்களால் வெளிப்படுத்த முயல்கிறேன். உவமைகள் பழகிவிட்டன. அங்காடி நாய்போல அலைச்சல். இதுவும் யாரோ சொன்னதே.

நந்திதா 1:வந்தாயிற்று. இங்கு ஒரு குறையுமில்லை. நேசிக்கும் பூனைகள்போல் சுத்தக்காரி. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு காகிதத் துண்டுகூட இல்லை. புதர்களில் சிக்கி அலைக்கழியும் வெள்ளை பிளாஸ்டிக் பைகள் இல்லை.

நந்திதா:நம்மைக் குற்றவுணர்வுக்காளாக்கும் பிச்சைக்காரர்கள் இல்லை. கண்களைத் தாழ்த்தியபடி வேகவேகமாக அவர்களைக் கடந்துபோக வேண்டியதில்லை. கால்களின் சூடு குரலில் தகிக்க ஒரு கிழவி மல்லிகைப்பூ விற்றுப்போவாள். வெயிலில் வதங்கிச் சுருங்கிய தோல்.

நந்திதா 1:நாய்களைப் பற்றி இப்போது பேசுவாய்.

நந்திதா: நாய்களைப் பற்றி நான் நிறையப் பேசிவிட்டேன்.
குப்பைத்தொட்டிகளை பசியின் கண்களால் கிளறும் நாய்களைப் பற்றி நான் பேசிவிட்டேன். பூனைகள்…

நந்திதா 1:இறந்துபோயின நிராதரவாய். இறந்துகொண்டிருக்கிறது ஒன்று.

நந்திதா:ஞாபகங்கள் பட்டு மென்மயிராய் காலுரசுகின்றன. இல்லை முட்களாய் குத்துகின்றன. அவற்றின் துக்கம் தோய்ந்த கண்களை நான் கனவுகாண்கிறேன்.

நந்திதா 1:இந்தச் சாலைகளைப் பார்! விபத்துக்களைத் தவிர்க்க மட்டுமே ஒலிப்பான்கள் என உணர்ந்திருக்கும் ஓட்டுநர்கள் நிறைந்த நகரம் இது.

நந்திதா:வாகனங்களுக்கிடையில் எவ்வளவு இடைவெளி. சுருட்டிச் சுருட்டி வயிற்றுக்குள் போட்டுக்கொள்வதைப்போல… விழுங்கியபின்னும் கறுத்தப் பாம்புகளெனத் தொடரும் சாலைகள்.

சில சமயங்களில் ஒற்றை ஆளாய் சாலையோரம் நடக்கும்போது அச்சமாகவும் இருக்கிறது. நடப்பதற்காக வேண்டி மட்டுமே நடக்கும் மனிதர்களின் ஊரிது.

நந்திதா 1:வேக நெடுஞ்சாலைகளால் தூரம் குறுகிவிடுகிறது. நகரம் வேண்டியமட்டும் கொள்ளுமளவு சுருங்கியிருக்கிறது. ஐந்தே நிமிடங்களில் நான் விரும்பிய உணவகத்திற்குப் போகிறேன்.

நந்திதா:நள்ளிரவுகளிலும் விழித்திருக்கும் பேரங்காடிகள்.

நந்திதா 1:விற்பனையாளர்கள் குறிப்பாக அழகிய பெண் விற்பனையாளர்கள் சிந்தும் புன்னகை இதமாயிருக்கிறது. நமது கண்களைப் பார்த்து உண்மையான அர்த்தம் தொனிக்கும்படியாக ‘நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘வருந்துகிறேன்’என்ற வார்த்தைகளைச் சொல்கிறார்கள். அடுத்து உள்வரவிருக்கும்-வெளியேறவிருக்கும் நபருக்காக கதவை அநேகமானோர் திறந்துபிடித்தபடியிருப்பது உயர்பண்பு.

நந்திதா:வீடுகள்…

நந்திதா 1:ஆம் வீடுகள். விசாலமான படுக்கையறைகள். சோம்பேறிகளை உற்பத்தி செய்யும் சோபாக்களும், கூறியது கூறும் தொலைக்காட்சிகளும். உடம்பை அன்னையைப் போல ஏந்திக்கொள்ளும் மெத்தைகள். கார்கள்… கார்கள்… மேற்கூரை திறந்திருக்க காற்றில் இழையும் கூந்தல்.(கூந்தல் என ஒருமையில் சொல்வதா மயிர்க்கூட்டம் ஆகையால் பன்மையா)

நந்திதா: மெத்தைகளை இப்படியும் சொல்லலாம்-காதலனைப் போல உள்வாங்கிக்கொள்ளக்கூடியன. ஆனால், மெத்தைகள் துரோகிக்குந் தன்மையற்றவை. ஆனால் அறிந்தவை.

இயந்திரங்களுக்கு உடலைத் தின்னக்கொடுத்தவர்கள் அன்றேல் நண்பர்களுடன் மதுவருந்தியவர்கள் நடுநிசி கடந்து தங்கள் விசாலமான, நான்கைந்து குளியலறைகளுடன் கூடிய அற்புதமான வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். ஒற்றை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. நானூறு டொலர்களுக்கு வாங்கிய மரத்தினாலாய கிருஷ்ணன் அரையிருளில் நின்றபடி புல்லாங்குழலூதிக்கொண்டிருக்கிறான்.

நந்திதா 1:மனைவி வீட்டு வேலைகளை முடித்து அப்போதுதான் உறங்கவாரம்பித்தாள். அல்லது அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்வழியில் குழந்தைக் காப்பகத்திலிருந்து குழந்தையை அழைத்து வந்திருந்தாள். பிள்ளைகள் தூங்கி வெகுநேரம்.

நந்திதா:எல்லா மனைவியரும் தூங்குவதில்லை. இரவின் நிறம் உண்மையாகவே கறுப்பு. தனிமை…

நந்திதா 1: தனிமை…இனிதாம்! தனிமை சிலசமயங்களில் செவிகிழியக் கூச்சலிடும். தனிமை குறித்த பேச்சுகளை நான் தவிர்க்கிறேன்.

நந்திதா:அதுதான் விவாகரத்துக்கள் பெருகிவிட்டனவா?

நந்திதா 1:இரவு சில குழந்தைகளுக்குப் பிரளயம். தாயும் தந்தையும் பொருதும் போர்க்களத்தில் குழந்தைகளே மடிந்துபோகிறார்கள். வளர்ந்த பிள்ளைகள் மதுக்கோப்பைகளிலேறி தப்பித்து விடலாமென எண்ணிப் போகிறார்கள். சிறிய வயதிலேயே காமமும் போதையும் பெருகிவழியும் அறைகளுள் உறவுகள் சலிக்கின்றன. துரோகம் வலதுகாலை எடுத்துவைத்து உள்நுழைகிறது.

நந்திதா: தொலைக்காட்சியில் உரத்தலறும் குரலுக்குப் பின்னணியாகிறது விசும்பல். “அவள் போய்க்கொண்டிருக்கிறாள்… அவன் போய்க்கொண்டிருக்கிறான்… அவர்கள் போய்விட்டார்கள்”

நந்திதா 1:இது ஜூலை மாதம். இதமான குளிர் காற்றில் இருக்கிறது. சில இலைகளை கைதேர்ந்த சித்திரக்காரர்கள் மினக்கெட்டு வரைந்திருக்கிறார்கள். கடவுளே! அரிதிலும் அரிதான நீலப் பூக்களை நான் பார்த்தேன். மரங்கள் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் போல… இல்லை… உவமைகள் சலித்துவிட்டன. மரங்கள் பச்சையாக முழுதாகச் சாப்பிட்டுவிடலாம் போல செழிப்பாக இருந்தன.

நந்திதா: டிசம்பரில் பனி பொழியும். பால் தோற்கும் வெண்மை! எலும்புக்குருத்துக்கள் நடுங்கும். தோலைக் குளிர்வண்டு குடையும். உன் செவி உனதல்லாததாகும். விபத்துச்செய்திகளுடன் காலைகள் விடியும். குளிர் தொடுக்கும் போரில் உடல் தோற்றுச் சாயும்.

நந்திதா 1:எனது மண்ணில் எல்லா மாதங்களும் டிசம்பராக இருக்கக்கூடாதா என்று நான் ஏங்கியிருக்கிறேன். வேம்பில் மழைத்துளி தொங்கும். துளி மூக்கும் கண்ணுமாய் ஒரு குருவி பூவிலாடும். வெயில் இளங்கால்களால் நகர்ந்து நகர்ந்து படியிலேறும்.

நந்திதா:ஏக்கங்கள் தீர்ந்துபோய்விட்டன. வாழ்க்கை கவனமாகக் கையாளவேண்டிய கண்ணாடிக் குவளையாகிவிட்டது. எந்நேரமும் சிதறலாம்.

நந்திதா 1:வாழ்ந்தே தீர்வது வாழ்க்கை. மரணத்திற்கும் காரணங்கள் வேண்டும்.

நந்திதா:எல்லாவற்றிற்கும் காரணங்கள் தேவை. ஒரு இலை விழுவதற்கும், இருமுவதற்கும், ஒற்றைச் செருப்பை நாய் இழுத்துப் போனதற்கும், ஒரு கவிதையாகியிருக்க வேண்டியது வெறும் சொற்களாக உதிர்ந்துபோனதற்கும், ஒரு பெண் வேசியானதற்கும்.

நந்திதா 1:காரணங்கள் ஆசுவாசத்தைத் தருகின்றன. பதட்டத்தை நீக்கிவிடுகின்றன.

நந்திதா:இருப்பு மரணத்திற்கு ஈடாக இருக்கிறது. யாவும் யாவரும் சலித்துவிட்டன-விட்டனர். இந்த அறை முழுவதும் நிரம்பி வழிகிறது தனிமை. சுயநலத்திலிருந்து, குரூரத்திலிருந்து, கோழைத்தனத்திலிருந்து, குற்றவுணர்விலிருந்து, பொய்களிலிருந்து, பொறாமையிலிருந்து, பாசாங்குகளிலிருந்து, பயன்படுத்தப்படுதலிலிருந்து, துரோகத்திலிருந்து, ஆற்றாமையிலிருந்து, அறிவீனத்திலிருந்து… இன்னும் இன்னும் பலவற்றிலிருந்து நான் தப்பித்துச் செல்ல விரும்புகிறேன்.

நந்திதா 1: வாழ்வதற்கான காரணங்களைப் புதிதாகக் கண்டுபிடி அன்றேல் உருவாக்கு.

நந்திதா: எல்லாம் கைவிட்டபிறகு எழுத்து என்னை ஏந்திக்கொண்டிருப்பதாக உளறிக்கொட்டிக்கொண்டிருந்தேன். என்னை முன்னிலைப்படுத்த, அடையாளப்படுத்த, தூக்கிப்பிடிக்க எழுத்தை நான் துரோகித்தேன். விளையாட்டின் ஒரு கட்டத்திற்கப்பால் பாவனைச் சோறு மண்ணாக மெய்த்தோற்றம் காட்டுவதைப்போல், புத்தக மாந்தர்களும் சலித்துவிட்டார்கள். எழுத்து, பூனைக்குட்டி, காதல், மொழி, நண்பர்கள், வீடு, சுற்றம் என வாழ்தலுக்குக் கற்பித்த காரணங்கள் யாவும் தீர்ந்துபோய்விட்டன.

நந்திதா 1:வாக்குமூலமா?

நந்திதா: ஆம்! விட்டுச்செல்லவேண்டியிருக்கிறது காரணங்களை. வாழ்தலில் சலிப்பு என்பது பொருத்தமான அல்லது போதுமான காரணமாகாது இல்லையா நந்திதா!

7.02.2008

பக்கம் நிறைத்தல்



எழுதி ஏதும் நிகழப்போவதில்லை என்பதறிந்தும், எழுதாமலிருப்பது குற்றவுணர்வைத் தருகிறது. புலம்பெயர்ந்த நாட்டிற்கே மீண்டும் பெயர்ந்து வந்து, ஐந்தாண்டுகளின் முன் திரிந்த தெருக்களையும், கடந்த நாட்களையும் மனிதர்களையும் மீளக்கண்டுபிடிக்கவே பொழுது சரியாக இருக்கிறது. மேலும் ஒப்பீடுகளில் அலைக்கழிகிறது திருப்தியடையாத மனம். எதையாவது கொண்டு தன்னை நிரப்பச்சொல்லி தீனமாக அழைத்துக்கொண்டேயிருக்கும் இப்பக்கத்தை, கடந்த மாதம் 'உயிர்மை'இதழில் வெளியான கவிதைகளை இடுவதன் மூலம் தற்காலிகமாக சமாதானம் செய்கிறேன். என்னையும்.
------------------------
நெடுங்கோடை

காத்திருப்பில் தசாப்தங்கள் உதிர்ந்துவிட்டன
மலர்களைப்போல…
குருதிதோய்ந்த செம்பருத்தி மலர்கள்.

மேப்பிள் மரங்களுள் சிறைப்பட்டிருந்த
கபிலநிறத் துளிர்கள் விடுபட்டன
இது பதினோராவது வசந்தம் நந்தா!
கடந்த குரூரப்பனியிலும்
வீடேக விதியற்றாய்.
மூடப்பட்ட பாதையை நோக்கி
ஒரு சேனையென
இரகசியமாய் நகர்கிறது காடு.

அகாலத்தில் ஒலிக்கும் தொலைபேசிக்கு
மரணத்தின் நாக்கு
பிராங்போட்டில் நேரம் நள்ளிரவு 2:16
அழாதே சந்தியா!
மூளை வெண்குழம்பாய் சுவர் தெறித்த
காட்சிபெறா கண்கள் வாய்த்தமைக்கு மகிழ்.
நினைவின் சாலையில் நிலைக்கட்டும்
கையசைத்துத் தளர்ந்தபடி திரும்பிப்போன
அவன் முதுகும் அம்மழைநாளும்.

குட்டிச்செல்லம் ஜனனி
தன் சின்னக்கைகளில் ஏந்தியிருக்கிறாள்
ஒரு புகைப்படத்தை.
மெழுகுவர்த்திகளும் இதயங்களும்
ஒருசேர உருகும் இந்நினைவிடத்தில்
இருளிலிருந்து கசியும் சிறு விசும்பலுக்காய் காத்திருக்கிறேன்
தனியே அழுவது வெட்கமடி கண்ணே!

சென்னையின் பெருநகரப் புறாக்கூடொன்றில்
கோடையைக் குடித்தபடி
உண்டியல்காரனுக்காய் காத்திருக்கிறான் நிலவன்.
'தொலைதூரக் கனவு'கள் மினுக்கிடும் விழிகளோடு
நாளையில்நடந்து கால்சலிக்கிறான் முகிலன்.

எலும்புகள் குருதியால் கெட்டித்த வீதிகளில்
'புற்கிழங்கு விழிக்கும்
பூக்கள் காற்றொடு இழையும்'
என்ற தேய்ந்த சொற்களால்தான்
முடிக்கவேண்டியிருக்கிறது
இந்தக் கவிதையையும்.


(மேப்பிள்:கனடாவின் தேசியக்கொடியிலுள்ள இலை அடையாளம், உண்டியல்காரன்:வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை வீட்டில் கொணர்ந்து தருபவன்)

--------------------------------------
கண்ணாடிகளின் கதை

ஒவ்வொரு விடியலிலும்
வீட்டு வாசல்களில்
கண்ணாடிகள் விநியோகிக்கப்படுகின்றன
வாராந்தரக் கண்ணாடிகளிற் சில
கடைகளில் மார்புக்குவடு காட்டித் தொங்குகின்றன.

கண்ணாடிகள் காட்சிப்படுத்துகின்றன:
படுக்கையறைகளில் கலவுபவர்களை
விடுதிகளில் விபச்சாரிகளாகும் நடிகைகளை
உங்கள் கற்பெனும் கற்பிதத்தின்மேல்
காறியுமிழ்ந்தோடும் கள்ளக்காதலர்களை
நடிகரின் நாய்க்கு வாயு பறிந்ததை
மேலும் பிரமுகர்களின் வைப்பாட்டிகளை…
அந்தரங்க அரிப்பிற்குச்சுகச்சொறியல்!

மூளைக்குப் பதிலியாக
வரவேற்பறைகளில் வீற்றிருக்கிறது
சதுர வடிவிலொரு கண்ணாடி.
நடனித்தல் கழிந்தநேரம்
முகக்களிம்பிலிருந்து ஆணுறைவரை
பரிந்துரைத்தலதன் பணி.

பல்லாயிரம் கண்ணாடிகள் வழி
பல இலட்சம் கண்கள் குவிகின்றன
சின்னஞ்சிறுமியின் காலிடுக்கில் நிற்காத உதிரப்பெருக்கில்.
உங்கள் யன்னல்களிலெல்லாம்
கண்களும் புகைப்படக் கருவிகளும்.
பதறிப்போய் கண்ணாடியைக் கழற்றுகிறீர்கள்.

யாதொன்றும் செய்வதற்கில்லை நண்பரே!
நீங்கள் குருடாகிவிட்டிருக்கிறீர்கள்.


-----------------------------------------------

பறத்தல் அதன் சுதந்திரம்

உன் கோபத்தின் சூறை அணைத்துவிட்டது
என் வீட்டின் எல்லா விளக்குகளையும்.
காதலின் ஒப்பனைகள் கலைந்த
இவ்வரங்க இருள் அழகாயிருக்கிறது
அபத்த நாடகங்களைக் காட்டிலும்.

துதிபாடிகளின் தோழி…
ஒளிவட்டங்களின் காதலி…
சூதாடிகளின் கைப்பகடை…
வசைகளின் நிறுத்தற்குறியாய்
ஒரேயொரு கண்ணீர்த்துளி.

இப்போது கோபமில்லை.
நதிகளும் விழுந்துவிடும் பள்ளங்களை
கண்ணீர் எப்படியோ தாண்டிவிடுகிறது.

தன் திசை மீளும்
வலசைப் பறவையின் சிறகுகளுள்
சேகரமாயிருக்கின்றன மரமுதிர்த்த ஈரத்துளிகளும்
வசந்தத்தின் போதொலித்த பாடல்களும்.

புவியீர்ப்பை மீறி
பறத்தலே நியதி.

(தலைப்பிற்கு நன்றி:க்ருஷாங்கினி

நன்றி: உயிர்மை