1.05.2007

மரணம் பற்றிய குறிப்பு




ஒரு கயிற்றில் கழுத்திறுகி முடிந்துவிட்டது உன் வாழ்வு. உடலை எடுத்துச்செல்வதன் போதான ஒத்திகைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் சிலர். உனது மரணத்திற்கான காரணங்களை தத்தமது சிந்தனை விரிவுக்கும் உளவியல்சார் அறிவுக்கும் ஏற்ப விரித்தபடியிருக்கிறார்கள் வேறும் பலர்.

காரணங்கள் வேண்டும் எல்லோருக்கும்… எல்லாவற்றுக்கும் (வயிற்றுநோவிலிருந்து கயிற்றில் தொங்குவது வரை) உன்னோடு சேர்த்துப் புதைப்பதற்கு காரணங்கள் இல்லாமற்போவதென்பது, எஞ்சியிருப்பவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கிவிடுமல்லவா…? மண்ணள்ளிப் போட்டு கையைத் தட்டிவிட்டு சுடுகாட்டிலிருந்து திரும்பிப் பாராமல் போய்விடவேண்டும். ‘இந்தப் பாவம் என்னையும் எனது சந்ததிகளையும் சேராதிருக்கட்டும்’என, கிறிஸ்துவைச் சிலுவையிலேற்றும் தீர்வை விதித்த பின் தனது கைகளைக் கழுவிக்கொண்ட நியாயாதிபதி சொன்னதைப்போல இருக்கின்றன எஞ்சியிருப்பவர்கள் சொல்கின்ற காரணங்கள். சதாம் கூசைனைத் தூக்கிலிட்டதைப் பகிரங்கமாகக் காட்டியதனால் தூண்டப்பட்டாய் என்றார் ஒருவர். ‘எனது சாவிற்கு எவரும் காரணமில்லை’என்ற வார்த்தைகளை தொலைக்காட்சி நாடகங்களிலிருந்தும் சினிமாக்களிலிருந்தும் நீ எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள் சிலர். பெண்ணே! உனது மரணம் இன்றைய நாளின் பேசுபொருளாயிருக்கிறது அவ்வளவே!

நேற்றிரவு தூக்கமாத்திரையையும் மீறி விழிப்பு வந்தது. நீ தனியே பிணவறையில் படுத்திருப்பாய் என்பது அமானுஷ்யமான பயத்தை ஊட்டியது. எழுந்தமர்ந்து எழுதத் தொடங்குகிறேன். எழுத்தைத் தவிர வேறெவர் என்னைத் தாங்கிக்கொள்ளக்கூடும்…? அதன் தோள்கள் ஒரு பறவையினுடையதைப்போல மிருதுவானவை. புகைப்படத்தில் உன்னை முற்றிலுமாக அடைத்து விடும்முன், நீ மரணத்தின் மூலம் என்னோடு பேசியிருப்பதைச் சேமிக்க விரும்புகிறேன்.

“தற்கொலை என்பது கோழைத்தனம் என்று சிலர் சொல்லக்கூடும். அது தைரியமற்றவர்களின் வார்த்தை. மரணம் என்பது மாவீரம்” என்று ஒருவர் எழுதியிருந்ததை நேற்று வாசித்தேன். அது எத்தகைய உண்மை. வாழ்வின் மீதுதான் எத்தனை வெறித்தனமான காதல். “உனக்குப் பதிலாக என்னை எடுத்துச் சென்றிருக்கக் கூடாதா…?”என்று பிரலாபிக்கிறவர்களின் முன் எமன் தோன்றி “எடுத்துக்கொள்ளட்டுமா…?”என்று கேட்டால், விக்கித்து விதிர்விதிர்த்துப் போய்விட மாட்டார்களா…?

தற்கொலையை நோக்கிச் செலுத்தும் தருணங்களைத் தன்னிரக்கம் வென்றுவிடுகிறது. நமக்கு மரணத்தின் மீதான பயத்தை, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீதான கரிசனையாக மாற்றிக்கொள்கிறோம். அவர்கள் நம்மை நினைத்து எப்படியெல்லாம் அழுவார்கள் என்ற கற்பனையிலேயே கரைந்துபோய்விடுகிறது தற்கொலைக்கான எண்ணம். “இப்படி வாழ்வதைவிட செத்துப்போய்விடலாம் போலிருக்கிறது”என்ற அபத்தத்தில் தோய்ந்த வார்த்தைகளை எத்தனை தடவைதான் பேசியிருப்போம். உணர்ந்து பேசும் வார்த்தைகளை விட செவியில் ஒலிக்கக் கேட்ட வார்த்தைகளைத்தானே பழக்கதோஷம் காரணமாகப் பேசுகிறோம்.

தற்கொலையைப் பற்றி யாரும் சிந்திக்கலாம். திட்டமிட முடியாதென்றே தோன்றுகிறது. திட்டமிடும் நேரம் நீள நீள அதன் மீதான விருப்பு குறுகிப்போகலாம். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும்போது பேசத்தொடங்குகிற சாத்தானின் குரலை செவிமடுக்கத் தொடங்கும் ஒரு கணம்தான் பெரும்பாலானோரைத் தற்கொலையை நோக்கி அழைத்துப்போகிறது. மரணம் என்ற பொறி சட்டெனப் பற்றிக்கொள்கிறது. வாழும் நாட்களில் கவனிக்கப்படாதவளை-கவனிக்கப்படாதவனைக் குறித்து உன்னிப்பாகக் குவிகிறது கவனம். புறக்கணிப்பின் மீதான பழிவாங்குதலாகத்தானே பெரும்பாலும் தற்கொலைகள் அமைந்துவிடுகின்றன.

பெரியவர்கள்தான் குழந்தைகளின் பிதாமகர்கள், ஆதர்சங்கள், தேவதைகள்… சின்னப் பெண்ணே! தேவதைகளை நம்பியிருக்கத்தேவையில்லை! அவர்கள் வாழ்வின் அவசரங்களில் சுயநலத்தால் சிலசமயம் வேண்டுமென்றே வாக்குறுதிகளை மறந்துபோகிறவர்கள். வெண்துகில் பறக்க வானத்திலேறி விரைந்துபோய்விடுவார்கள்.

அன்று விடைபெறும்போது நான் உன் கண்களைப் பார்த்திருக்கலாம். உனக்கே உனக்கென பிரத்தியேகமாக ஒரு சொல்லையாவது சொல்லியிருக்கலாம். நான் உனக்களித்த வாக்குறுதியை தனியறையில் உனது கையை அழுத்தி மீண்டும் அளித்திருக்கலாம். எல்லோருடைய சாவிற்குப் பின்னாலும் இப்படிப் பல ‘லாம்’கள் உதிர்க்கப்படலாம். முற்கூட்டியே எழுதப்பட்ட விதியால்தான் பொதுவான ஒரு புன்னகையும் கையசைப்பும் தந்து விடைபெற்றேன் என்று, எனது குற்றவுணர்வை எரித்தேன் தேவகி!(உயிர் காற்றில் கலந்துவிட்டபிறகு உன்னை ‘பிணம்’என்றார்கள். நானும் பெயரை மாற்றிவிட்டேன்.)

“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.

எனக்கு வெற்று ஆறுதல்களில், கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. கழிந்துபோகும் நாட்களால் மட்டுமே கண்ணீரைத் துடைக்கமுடியும். மனசுக்கு நெருக்கமானவர்களை மறக்கவியலாத அந்தக் குரல் அழைத்துக்கொண்டேயிருக்கும். சிலநாட்களில் அந்தக் குரலும் தேய்ந்து ஒலிமங்கி மறைந்துபோய்விடும். பிறகென்ன… பிறகு… மாலையுடனான ஒரு புகைப்படம் தொங்கும். விசேட நாட்களில் ஊதுபத்தி புகை வளையமிடும். இறந்துபோனவளை-இறந்துபோனவனைப் பற்றிய கதைகள் மிகுபுனைவுகளுடன் பேசப்படும்.

பல சமயங்களில் நாம் எல்லாமாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் ஒன்றுமேயில்லை என்பதை மற்றவர்களின் மரணம் உணர்த்துகிறது. நேற்று ‘தேவகி’ ‘பிணம்’எனப் பேசப்பட்டாள். கால்முளைத்த காற்றெனத் திரிந்த ‘அவள்’ ‘அது’வானாள்.

கண்முன்னால் நடந்து சிரித்து நேசித்து கேலிசெய்து சிலசமயம் அழவும் பார்த்த ஒரு உயிர், ஒரு புகைப்படத்திலும் எப்போதாவது கொள்ளப்படும் ஞாபகத்திலும் சில கண்ணீர்த்துளிகளிலும் முடிந்துவிடுவது என்பது, மனிதர்களால் பேசப்படுகிற அதியுன்னதங்களின் மீதெல்லாம் கேள்விகளை எழுப்புவதாக அமைந்துவிடுகிறது. அப்படிப் பார்க்கையில், வாழ்க்கையே ஒரு மாபெரிய அபத்தம் என்பதன்றி வேறென்ன…?

14 comments:

Anonymous said...

நல்ல பதிவு. நல்ல மொழிநடை.
நிற்க,
அந்த தற்கொலைக்கான அக புற காரணிகளை ஆய்வுசெய்து கேள்விக்குள்ளாக்கியிருப்பின் மேலும் சிறப்பாயிருக்கும்.

தமிழ்நதி said...

நன்றி சூரியகுமார்,

அந்தக் குறிப்பிட்ட தற்கொலைக்கான அகபுற காரணிகளை பதிவில் ஆராய்வதும் கேள்விக்குள்ளாக்குவதும் சரியல்ல. பொதுவாக ஆராய்ந்திருக்கலாம்தான். அதற்குரிய மனோநிலை இன்றில்லை. தவிர, எல்லாவற்றுக்கும் காரணங்கள் கண்டுபிடித்து திருப்திகொள்வதனால் உறுத்தல்கள் அற்றுப்போகிறது. சகமனிதரின் அன்பற்ற வெறுமையைத் தவிர வேறெது வாழ்வைவிட மரணமே மேலானது என்ற முடிவுக்கு வரவைக்கிறது?

Anonymous said...

இதற்கொரு பதிற்பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்.
;-)

கலை said...

:(((((, உங்கள் பதிவும், எழுத்து நடையும் மனதில் வலியை தருகிறது.

Anonymous said...

நல்லதொரு பதிவு.மரணத்தை பற்றி பலர் கதைத்திருக்கிறார்கள். 20நூற்றாண்டின் புத்தன். என அழைக்கப்படு ஜே.கிருஸ்ணமூர்த்தி மரணத்தை பற்றி கூறியதை பார்க்க.. இங்கே அழுத்தவும்

VSK said...

உங்கள் பதிவைப் படித்தவுடன், என்றோ ஒரு சித்தர், சாவு வீட்டில் அழுது கொண்டிருந்தவர்களைப் பற்றி சொன்னது, நினைவுக்கு வந்து தொலைத்தது!

"இன்று செத்ததைப் பார்த்து நாளை சாகப்போகும் ஜடங்கள் அழுது கொண்டிருக்கிறன்றன!"

நாளை நம் புகைப்படத்தைப் பார்த்தும் இதுபோன்ற சோகக்கதை வரலாம்!

நல்ல எழுத்துநடைக்கு என் பாராட்டுகள்!

தமிழ்நதி said...

சின்னக்குட்டி, நீங்கள் சுட்டிய ஒளிநாடா பார்த்தேன். நன்றி.

எஸ்.கே.,பிறப்புக்கும் மரணத்துக்கும் இடையிலான வாழ்வை அர்த்தமுள்ளதாக, சகஉயிரில் அன்புள்ளதாக வாழ ஏன் மறுக்கிறோம் என்பதே எனது கேள்வி. எல்லோரும் சாகப்போகிறவர்கள்தான் என்றாலும் வாழும்போதே உயிருள்ள பிணங்களாக ஏன் இருக்கவேண்டும்?

Anonymous said...

ம் நான் பேசவேண்டும் என்று நினைத்தேன் தமிழநதி அக்கா பிறகு பேசலாம் என்று விட்டு விட்டேன் தற்கொலையின் வலியும் வேதனையும் எனக்கும் புரியும்

Anonymous said...

மறக்கப்பட்டவர்களின் இந்த முடிவை நாம்
மறக்கத் தெரிந்திருக்கிறோமென்பது ஆச்சரியம் தரத்தக்கது,
ஆதாரமாய் அதுதான் நம் வாழ்வையும் ஓட்டிக்கொண்டிருக்கின்றது!

//புறக்கணிப்பின் மீதான பழிவாங்குதலாகத்தானே
பெரும்பாலும் தற்கொலைகள் அமைந்துவிடுகின்றன.//
வலியில்லாதவர்களுக்கு வலியை புரியவைப்பது
மிகக் கடினமான ஒன்று. அந்த வேலையை
இந்தப் பதிவு செய்கிறது, தனிமையின் வலியை
அந்த வலி காட்டும் வழியை இந்த வரிகள் தெளிவாய்
காட்டுகின்றன.

வலியை நன்றாய் பதிந்திருக்கிறீர்கள் என்று சொல்லவும்
முடியவில்லை, சொல்லாமலும் இருக்க முடியவில்லை!

thiru said...

தமிழ்நதி,

வலியை, வேதனையை வார்த்தைகளில் காண்கிறேன். காலம் எல்லா வேதனைகளுக்கும் ஒரு மருந்து என்பதை தவிர வேறு என்ன சொல்வது தெரியவில்லை :((

Anonymous said...

வணக்கம் தமிழ்நதி..
உங்கள் எல்லா ஆக்கங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.. மன்னிக்கவும் முழுவதும் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. ஆனாலும் மேலோட்டமாக வாசித்த அனைத்தும் மிக நன்று...
வாழ்த்துக்கள்
அன்புடன்
வை.

ராமலக்ஷ்மி said...

வணக்கம்

ஆழமான பதிவு. படித்ததும் மனம் கனத்து விட்டது. தற்கொலைக்கு எந்த மாதிரியான சூழ்நிலைகளால் தள்ளப் படுகிறார்கள் என நீங்கள் சொல்லியிருப்பது அனைத்துடனும் உடன் படுகிறேன். எனது புரிதலும் அதுவேதான். ஆனாலும் தற்கொலைகள் நிகழக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்த [சற்றே காட்டமாக இருந்தாலும் வேறு வழியின்றி] நான் எழுதிய சிறுகதை 'கரையைத் தேடி' http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post.html.

//ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்//

இது முற்றிலும் உண்மை.

ராமலக்ஷ்மி said...

வலைச் சரம் வழியாக வந்தேன். சுட்டியைத் தந்த சந்தனமுல்லைக்கு நன்றி.

Thaman said...

“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.........
Nice & True Lines..